நீண்ட இழுபறிக்கு பிறகு சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை தொடர்பாக சில செய்திகளை தெரிவித்தார். தனக்கு முதல்வர் பதவியில் விரும்பம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ரசிகர்கள் அவரின் இந்த கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, " எழுச்சி வரவேண்டும் என்று கேட்கிறார்கள், இதுவரை தமிழகத்தில் எழுச்சி வரவில்லையா? பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மீட்க வேண்டும், நாட்டுமாடுகளை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி, சட்டத்தை வளையவைத்து, ஆட்சியாளர்களை மண்டியிட வைத்தார்களே அது எழுச்சியாக தெரியவில்லையா? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பலபேர் துப்பாக்கி குண்டுக்கு இரையானார்களே அது உங்களுக்கு எழுச்சியாக தெரியவில்லையா? ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரோட்டில் வந்து போராடினார்களே அது உங்களுக்கு எழுச்சியாக தெரியவில்லையா?
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று போராடினாரே அனிதா, அவ்வளவு போராட்டங்கள் செய்தும் தோற்றுபோய் மரணத்தை தழுவினாரே, அந்த இறப்புக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தினார்களே அந்த போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தால் நீங்கள் எழுச்சி பற்றி பேசலாம், அப்படி எதுவும் நீங்கள் செய்யாத போது அது எழுச்சி அல்ல, கவிச்சிதான். விவசாயிகள் எல்லாம் கோவணம் கட்டிக்கொண்டு தில்லியி்ல் போராடினார்களே அது உங்களுக்கு எழுச்சியாக தெரியவில்லையா? இன்றைக்கு கூட தில்லியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான முதியவர்கள், இளைஞர்கள், என அந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறார்களே, அப்பா அம்மாவுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்கும் அவலநிலைக்கு எதிராக போராடிகொண்டு, இன்றைக்கு நாடு முழுவதும் ஷாகின்பாக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தீர்கள் என்றால் எழுச்சி வரும், இல்லை என்றால் கவிச்சித்தான் வரும். இதையெல்லாம் பார்ப்பதற்கு வெட்கமாக இல்லை. இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கின்ற, அவர்களுக்கு ஒன்றென்றால் போராடுகின்ற நடிகர்கள், இயக்குநர்களின் படங்கள்தான் இந்த தமிழ் மண்ணில் ஓட வேண்டும். சொம்பு அடிக்கிறவர்களுக்கும், கூஜா தூக்குபவர்களுக்கும் எழுச்சி வராது. இந்தியா எங்கள் தாய்நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு. இதை எல்லாரும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். பச்ச பிள்ளைகள் நிலைவை பிடிக்க ஆசைப்பட்டது போல் உள்ளது நடிகர் ரஜினியின் பேச்சு" உள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.