Skip to main content

இம்மை, மறுமை குறித்து ஆதிகாலத் தமிழர்கள் கொண்டிருந்த வித்தியாசமான பார்வை!

Published on 25/06/2021 | Edited on 30/06/2021

 

senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூடியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், தமிழகத்திலுள்ள கோவில்களில் எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும், பெண்களும் அர்ச்சகராகலாம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்படுவார்கள் ஆகிய அறிவிப்புகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதைப் பிராமணர் அல்லாதவர்கள் பலருமே எதிர்க்கின்றனர். அதேநேரத்தில் இந்த அறிவிப்பிற்கு சில பிராமணர்கள் வரவேற்பும் தெரிவிக்கின்றனர். அதேபோல பெண்கள் அர்ச்சகராகலாம் என்பதற்கு சில பெண்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் எவை சரி? எவற்றை நாம் பின்பற்றலாம்? இதற்கு நம்முடைய வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். 

 

ஆதிகாலத்தில் தமிழர்கள் இயற்கையையே வழிபட்டுள்ளனர். அதில், சூரிய வழிபாடு முக்கியமானது. அதனுடைய நீட்சிதான் இன்று நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகை. அவர்களின் இம்மை, மறுமை கோட்பாடே வேறாக இருந்துள்ளது. நாம் இறந்த பிறகு இந்தப் பூமியில் நம் பெயர் வாழ்வதையே அவர்கள் மறுமையாகக் கருதியுள்ளனர். உதாரணத்திற்கு காமராஜர் மறைந்துவிட்டார். ஆனால், இன்றைக்கும் அவரது பெயர் இந்தப் பூமியில் நிலைத்திருக்கிறது. இதையே அவர்கள் மறுமையாகக் கருதியுள்ளனர். ஆரிய வருகைக்குப் பின்னரே சொர்க்கம், நரகம் என்ற கருத்துருவாக்கம் இம்மை, மறுமை குறித்து எழ ஆரம்பித்துள்ளது. ஆதிகாலத் தமிழர்களின் அடுத்த வழிபாடாக முன்னோர் வழிபாடு இருந்துள்ளது. தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த மறைந்தவர்களை வழிபடும் பழக்கம் பரவலாக இருந்துள்ளது.

 

இயற்கை பேரிடர், மிருகங்கள், வேற்று குழுக்களுடனான சண்டை இவற்றிலிருந்து மக்களைக் காத்தவர்களை வழிபடும் பழக்கமும் இருந்தது. குறிஞ்சி நிலத்தின் கடவுளாக முருகன் வழிபடப்பட்டதும் இந்த வகையில்தான். குறிஞ்சி நிலத்தின் தலைவனாக இருந்து தமிழ் இனத்தின் கடவுளாக மாறியவன் முருகன். தன்னுடைய முன்னோரை அல்லது தன்னைக் காத்தவர்களை வழிபட்ட தமிழர்கள், அவர்களை எந்த மொழியில் வழிபட்டிருப்பார்கள். அவர்கள் பேசிய மொழி தமிழாக இருக்கும்போது அவர்கள் ஏன் வேறுமொழியில் வழிபட வேண்டும். அப்படியென்றால், ஆதிகாலத் தமிழர்களின் வழிபாட்டு மொழி தமிழாகத்தான் இருந்துள்ளது. பல்லவர்கள் காலத்திற்குப் பிறகே இங்கு மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. தங்களுடைய வித்தியாசமான வணங்குமுறை மற்றும் ஆகம விதிகள் மூலம் மன்னர்களிடம் முக்கியத்துவம் பெற்ற ஆரியர்கள், அவற்றை இங்கிருந்த வழிபாட்டிற்குள் திணித்தனர். அதன் நீட்சியாக வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் நுழைந்துகொண்டது. பின்பு வந்த சோழர்கள் காலத்தில் ஓதுவார்கள் மூலம் தமிழ் வழிபாடு கோவிலுக்குள்ளும் ஆரியர்கள் மூலம் சமஸ்கிருத வழிபாடு கோவிலுக்கு வெளியேயும் இருந்தது. சில காலங்கள் கழித்து சமஸ்கிருதத்திற்கும் உள்ளே இடம்கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஓதுவார்கள் வெளியேற்றப்பட்டு முழுக்க முழுக்க சமஸ்கிருத வழிபாடு ஆக்கிரமித்துக்கொண்டது.

      

சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்தால்தான் அர்ச்சனை செய்ததுபோல இருக்கிறது என நம் ஆட்களே சிலர் கூறுகின்றனர். அவர்கள் அந்த நிலைக்குப் பழகிவிட்டனர். தமிழ், மக்கள் பேசும் பாஷை; சமஸ்கிருதம்தான் தேவபாஷை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இன்று கடவுளாக வழிபடப்படுபவர்கள் பேசிய மொழி என்னவென்று யோசிக்காமல் கடவுளுக்கென்று இவர்களாக ஒரு மொழியைக் கூறுகிறார்கள். எனவே, தமிழ்நாட்டின் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதுதான் சரியானது.