Skip to main content

“பச்சை துரோகம்” - விஜய் சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vijay sethupathi election video

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் அன்றே நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. தி.மு.க, காங்கிரஸ், இடது சாரிகள், வி.சி.க, உள்ளிட்ட சில கட்சிகள் இந்தியா கூட்டணியிலும் அ.தி.மு.க, தே.மு.தி.க தனி கூட்டணியிலும் பா.ஜ.க, பா.ம.க தேசிய ஜனநாயக கூடணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றனர். இதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

இந்த நிலையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பேசியதாவது, “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும். யார் வந்தா நமக்கென்ன... இல்லை யார் காசு கொடுக்கிறாங்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம்... ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை... இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.   

காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது. உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. 

நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா, அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா. நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க” என்றார்.  

சார்ந்த செய்திகள்