Skip to main content

"முதலில் இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்?" - முதல்வர் பயோ-பிக் குறித்த கேள்விக்கு விஜய் சேதுபதி பதில்

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

vijay sethupathi about cm stalin biopic

 

முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் விதமாக சென்னையில் அமைச்சர் சேகர் பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இந்த புகைப்படக் கண்காட்சி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியை திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில் வடிவேலு, சூரியை தொடர்ந்து நேற்று மாலை விஜய் சேதுபதி இந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டு பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், “சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய நீங்கள் முதல்வர் வேடத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா?” எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, "முதலில் இந்த கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்? ஒரு படம் எடுப்பது சாதாரணமான விஷயம் இல்லை. அதை நீங்கள் எளிதாக கேட்கிறீர்கள். மக்களுக்கு எப்படியோ கொண்டு போய் சேர்க்கும் எண்ணத்தில் தான் ஒரு படம் எடுக்கிறார்கள். அது என் கையில் இல்லை. அது வருவதைப் பொறுத்துத் தான் இருக்கிறது" என்றார். 

 

மேலும் பேசிய அவர், "எனக்கு முதல்வர் மேல் ஏற்கனவே மரியாதை இருந்தது. இளைஞரணி முதன்முதலில் திமுக-வில் தான் தொடங்கப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமான தகவல். இதற்கு முன்பு இது தெரியாது. பலரும் சொல்வார்கள் வாரிசு என்கிற காரணத்தால் அவர் வந்தார் என்று. இந்த வரலாற்றை பார்க்கும் போது அது இல்லை. அவரும் சாதாரணமாக வரவில்லை. இந்த வரலாற்றை தெரிந்துகொள்வது நல்லது. யார் நம்மை ஆள்கிறார்களோ அவர்களைப் பற்றி கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் வெளியில் இருந்து யார் நம்மை குழப்பிவிட்டாலும் அவர்களுக்கு உண்மையைச் சொல்ல முடியும். 

 

எப்போதும் வாழ்க்கையில் மேலே வளர்ந்து நிற்பவர்கள், குறிப்பாக அரசியலில் இருப்பவர்கள் பற்றி வேறு வேறு கருத்துகள் வந்து கொண்டே தான் இருக்கும். அந்தக் கருத்தைக் கொண்டு நமக்கு எது சரி என்று படுகிறதோ, அதைத் தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் படித்து முடித்துவிட்டு என்னவாகப் போகிறோம் என்பது போல், அரசியலிலும் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள். அரசியலையும் ஆள்பவர்களையும் தெரிந்துகொள்வது நல்லது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்