லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில் படத்தின் வெற்றிவிழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய விஜய் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பின்பு அவரிடம் ஒரு வார்த்தையில் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தார். மக்கள் என்ற கேள்விக்கு, "புடிச்சா தட்டி கொடுப்பாங்க. புடிக்கலம்னா தட்டிவிட்ருவாங்க" என்றார்.
2026, என்ற கேள்விக்கு, "2025க்கு அப்புறம் வருகிற வருஷம். அப்புறம் ஃபுட்பால் மேட்ச் நடக்கிறது" என்றார். குறுக்கிட்ட தொகுப்பாளர், தமிழ்நாட்டை பற்றி என கேட்க... "2026ல் கப்பு முக்கியம் பிகிலு" என்றார் விஜய். சமீப காலமாக அரசியல் ஈடுபாடுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவரது இயக்கம் மூலம் மாணவ மாணவிகளுக்கு பரிசு, இரவு பாட சாலை திட்டம், இலவச சட்ட ஆலோசனை மையம் என அடுத்தடுத்து புது முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். மேலும் அம்பேத்கர், காமராஜர், பெரியார் என பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார். இதனால் விரைவில் விஜய் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விஜய் "கப்பு முக்கியம்" என சொல்லியிருப்பது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.