Skip to main content

"மேல்நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது" - வைரமுத்து

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

vairamuthu helped youngsters

 

பாடலாசிரியர் வைரமுத்து, தனது அறக்கட்டளையின் மூலம் உயர் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி வழங்கினார். அந்த விழாவில் அவர் பேசுகையில், "எங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை கற்றுக்கொடுத்தீர்களே. காவலை கற்றுக் கொடுத்திருக்கிறீர்களா. ஒழுக்கத்தை கற்றுக் கொள்வதற்கு காவல் அரண்கள் கட்டப்பட்டிருக்கிறதா. 10 வயதில் இருந்து தமிழ்நாட்டில் குடிப்பதற்கு கற்றுக் கொண்டிருக்கிற ஒரு இளம் கூட்டத்தை தயாரித்ததற்கு யார் பொறுப்பு. அரசாணைகள் மட்டுமே பொறுப்பா. மதுக்கடைகள் மட்டுமே பொறுப்பா. கள்ளச்சாராயம் காய்ச்சுகிற ஊரில் நாளெல்லாம் அதை பார்க்காமலே திரும்பாமல் வாழ்ந்து வந்தோம். 

 

எத்தனை பேருக்கு பீடி வாங்கி வந்து கொடுத்திருப்பேன். எத்தனை பேருக்கு சிகரெட் வாங்கி வந்து  கொடுத்திருப்பேன். எத்தனை பேருக்கு சுருட்டு வாங்கி வந்து கொடுத்திருப்பேன். புகைத்ததில்லையே. அப்படியானால் ஒழுக்கம் என்பது புறச்சூழல்களால் அமைவது மட்டும் அல்ல. அக சூழல்களால் அமைவது ஒழுக்கம். இதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் எப்படி சொல்லிக் கொடுப்பீர்கள். நான் மிக மிக வருத்தப்படுவது, கிராமப்புற வாழ்க்கையிலும், நகர் புற வாழ்க்கையிலும் குடியின் பெருக்கம் மனிதனின் வாழ்வைத் தின்று கொண்டிருக்கிறதே என்பதுதான். 

 

மேல்நாட்டுக்கும் நம் நாட்டுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. மேல்நாட்டில் குடிக்காதவன் இல்லை. அங்கு குடி ஒரு குற்றம் இல்லை. குடி என்பது உணவு பழக்கவழக்கங்களில் ஒன்றாகி விட்டது. என்ன வேறுபாடு என்றால் மேல்நாட்டில் மதுவை அவன் குடிக்கிறான். நம் நாட்டில் மது மனிதனைக் குடிக்கிறது. 14.6 விழுக்காட்டில் தமிழக மக்கள் குடிக்கிறார்கள் என்றால், இதை நான் எங்கு போய் சொல்லி அழுவது. நான் அரசாங்கத்துக்கு விரோதமாகவோ, சார்பாகவோ பேசவில்லை. நான் மதுவிற்கு விரோதமாக, சமூகத்துக்கு சார்பாக பேசுகிறேன். இந்தியாவில் 7 பேருக்கு ஒருவன் குடிக்கிறான். 2004ல் மது விற்ற தொகை 3, 649 கோடி ரூபாய், ஆனால் 2022 மற்றும் 2023ல் 44 ஆயிரம் கோடி ரூபாய். 

 

தயவு செய்து ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும். இருக்கும் தலைமுறையை விட வளரும் தலைமுறை மேல் எனக்கு அக்கறை அதிகமாக இருக்கிறது. தமிழர்களின் மனித வளம் அபாரமானது. எந்த உலகத்திற்கு சென்றாலும். தமிழனுக்கு தனி நாற்காலி உண்டு. அவன் அறிவுக்கு தனி மரியாதை உண்டு. அப்படிப்பட்ட இனத்தில் இருந்து மனித வளம் குறைந்து விடக்கூடாது என்று வருத்தப்படுகிறேன். குடிதான் விபத்துக்களை உண்டாக்குகிறது. குடிதான் தற்கொலைகளை உண்டாக்குகிறது. இந்தியாவிலே அதிகமான தற்கொலைகள் நம் நாட்டில் இருக்கிறது என்பது ஒரு வருத்தத்துக்குரிய விஷயம். ஜப்பானுக்கு அடுத்து இந்தியா. இந்தியாவில் தமிழ்நாடு என்று கருதப்படுகிற போது விபத்துகளுக்கும், தற்கொலைகளுக்கும் காரணம் இதுதான். தன்னம்பிக்கையோடு வளர வேண்டும். வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும். அந்த உணர்ச்சியோடு எல்லாரும் வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்