பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவதையடுத்து, இன்றைய பொழுது பலருக்கும் அதிர்ச்சியுடன் தொடங்கியுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்துக் குவியும் பதிவுகள் எந்த அளவிற்கு ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக அவர் இருந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 'பாண்டியன் ஸ்டோர்' எனும் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் விஜே சித்ரா. இன்று சேனல்களின் எண்ணிக்கை பெருகிவிட்டன. ஒவ்வொரு சேனலையும் பொழுது விடிவதில் தொடங்கி அடங்குவது வரை சீரியல்களே ஆக்கிரமித்துள்ளன. இதற்கு மத்தியில் ஒரு நடிகை சீரியல் மூலம் பிரபலமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது என்பது எளிதானதல்ல. யார் இந்த விஜே சித்ரா?
சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது வாழ்க்கையைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகத் தொடங்கினார். 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் 'சட்டம் சொல்வது என்ன' என்ற நிகழ்ச்சியே இவர் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சியாகும். இதனையடுத்து, அவர் தொகுத்து வழங்கிய 'நொடிக்கு நொடி அதிரடி', 'ஊர் சுத்தலாம் வாங்க' ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து, சன் டிவியில் வெளியான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளர் எனப் பன்முகத்தோடு வேந்தர் டிவி, ஜீ தமிழ், ஸ்டார் விஜய் ஆகிய சேனல்களில் பிஸியாக இயங்கி வந்தார். 2018-ம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலிருந்து வந்த அழைப்பு அவரது சின்னத்திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. சித்ரா என்ற தனது பெயரை மறக்கடித்து மக்களின் மனதில் தன்னை முல்லையாக நிலைநிறுத்தும் வண்ணம் அக்கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
தொழிலதிபருடன் அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, விரைவில் திருமணம் நடைபெற இருந்தநிலையில் அவரது இந்த முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.