விவசாயிகளுக்கு துணை நின்று நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களைக் கெளரவப்படுத்தவும் நடிகர் கார்த்தி நடத்திவரும் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், உழவர் ஃபவுண்டேஷனின் 'உழவர் விருது 2022' விழா இன்று நடைபெற்றது. விழாவில் நடிகர் கார்த்தி, சூர்யா, உழவர் ஃபவுண்டேஷனின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களான மண்ணியல் உயிரியலாளர் சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் வல்லுநர் பாமயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் சூர்யா பேசுகையில், தங்கள் வீட்டில் இருந்த ஒரு காய்ந்த மரத்தை தானும் கார்த்தியும் பேசியே வளர வைத்ததாக தெரிவித்தார். இது குறித்து நடிகர் சூர்யா கூறுகையில், "எங்கள் வீட்டில் இருந்த ஒரு மரம் காய்ந்துவிட்டது. இது இனி வளரவே வளராது என்று தோட்டக்காரர் கூறிவிட்டார். நாம் பக்கத்தில் உட்கார்ந்து பேசினால் மரம் வளரும் என்று யூடியூபில் பார்த்தேன். அதைக் கார்த்தியிடம் சொன்னேன். ஒருநாள் அந்த மரத்தின் பக்கத்தில் சென்று, 'உன் பக்கத்தில் உள்ள மரம் எப்படி வளருது. அதை மாதிரியே நீயும் வளர்ந்தால் என்ன' என்று பேசினேன். அந்த ஒருநாள் மட்டும்தான் நான் பேசினேன். ஆனால், கார்த்தி தினமும் பக்கத்தில் அமர்ந்து மரத்துடன் பேசினார். தற்போது, காய்ந்த அந்த மரம் பக்கத்தில் இருந்த மரத்தைவிட உயரமாக வளர்ந்துவிட்டது. பராமரித்துக் கொண்டிருக்கிற தோட்டக்காரரே வெட்டிப்போட்டுவிடலாம் என்று சொன்ன ஒரு மரம், மீண்டும் வளர்ந்ததைப் பார்த்து எங்கள் வீட்டில் அனைவருக்குமே ஆச்சர்யம்" என நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.