கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் கரோனா நிவாரண நிதிக்காக 3 கோடி ரூபாய் கொடுத்த ராகவா லாரன்ஸ், பிறகு மீண்டும் 25 லட்ச ரூபாயைத் தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்தார்.
இதையடுத்து சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்சமும், சங்கத்திற்கு 25 லட்சமும் நிதியுதவி அளித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ். இதற்கிடையே சமீபத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த டாக்டர் ஜெயமோகன் பெயரால் எதிர்காலத்தில் மருத்துவச் சேவைகளுக்கான முன்னெடுப்பை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ் வேலையில்லாமல் கஷ்டப்படும் நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு உதவுவதாகச் சமூகவலைத்தளத்தில் அறிவித்தார். இந்நிலையில் தற்போது கரோனா ஊரடங்கினால் அவதிப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு முதற்கட்டமாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரம் செலுத்தியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.