ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் நேதாஜி தயாரித்து பிரபு நாயகனாக நடித்துள்ள படம் 'ஒளடதம்'. மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை ரமணி இயக்கியுள்ளார். இப்படத்தினை பிரபலப்படுத்தும் முயற்சியாக 'ஒளடதம்' பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். அதற்கான அறிமுக விழாவாக பிரமாண்ட பேனா வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இயக்குநர்கள் பாக்யராஜ் , பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்ட பேனா வெளியிடப்பட்டது. மேலும் திரையரங்குகளில் பேனா தரும்போது 'தமிழா தமிழில் கையெழுத்திடு' என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக்குழு . இதையடுத்து விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு பேசும்போது....
"இங்கே வந்துள்ள பாக்யராஜ் சார் சிறுபடங்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். இது நல்ல விஷயம். அதே போல அவரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல விஷயம் தெரிந்தவர்களிடம் பேசும் போது அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார். அப்படிப் பெயர் சொல்லும் போதும், பெயரை உச்சரிக்கும் போதும் அன்பு கூடுகிறது. நெருக்கமும் வெளிப்படும். இன்று தமிழில் கையொப்பம் இட வேண்டும் என்று முயற்சி தொடங்குகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழன்தான் ஆள வேணடும் என்று பல கட்சிகளில் குரல்கள் ஒலிக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இப்படிக் குரல் எழவில்லை. காரணம் அதற்கான தேவை அங்கில்லை. இங்கு இருக்கிறது. வேற்று மொழி ஆதிக்கம் பருந்து போல தலைக்கு மேல் வட்டமடிக்கிறது. தமிழ் மொழியையோ கோழிக்குஞ்சுகளைப் போல காப்பாற்ற வேண்டியிருக்கிறது. இன்று தமிழை வளர்ப்பதை விட முதலில் தமிழைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது காரணம் தமிழன் தமிழனாக இல்லை. எனவேதான் தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று இப்படிக் கேட்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலைக்கு வருத்தமாகவும் இருக்கிறது. இன்று மருந்தும் செல்போனும் அத்தியாவசியமாகிவிட்டன. இந்த இரண்டும் கேடு தருபவை. மருந்தை மையப்படுத்தி எடுத்துள்ள இப்படம் வெற்றி பெற வேண்டும்" என்றார்.