விஜய் டிவி புகழ் கவின் நாயகனாக நடிக்கும் 'நட்புனா என்னானு தெரியுமா' படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்துள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்துள்ள இப்படத்தில் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை புது முக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கியுள்ளார். மேலும் இப்படம் குறித்து அவர் பேசுகையில்.... "இது நண்பர்களுக்குள் நடந்த உண்மை சம்பவம். உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள். பின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் 'நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்" என்றார்.