Skip to main content

”என்னை தவிர யாருக்கும் இந்தக் கொடுப்பினை கிடைக்கல” - இயக்குநர் முத்தையா பெருமிதம்

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

director muthaiya

 

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 

 

நிகழ்வில் இயக்குநர் முத்தையா பேசுகையில், “உறவுகளின் பெருமை சொல்லப்படாமலேயே உள்ளது. இன்றைக்கு பல வீடுகளில் இரண்டு குழந்தைகள்தான் உள்ளன. வரும்காலத்தில் சித்தப்பா, பெரியப்பா, மாமா உறவெல்லாம் இருக்காது. இனி ஒரு குழந்தையோடு அனைவரும் நிறுத்திக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். எனவே என்னுடைய படங்களில் உறவுகளின் முக்கியத்துவத்தை சொல்ல விரும்புகிறேன். 

 

இந்தப் படத்தின் கதை ஓர் உண்மைக்கதை. என்னுடைய வீட்டிற்கு முன்னால் நான் பார்த்த ஒரு கதாபாத்திரம் மற்றும் அந்தக் குடும்பத்தில் நடந்த கதையைத்தான் படமாக எடுத்திருக்கிறேன். விருமன் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கிய உடனே கார்த்தி சார்தான் நினைவுக்கு வந்தார். அவரிடம் சார் படம் பண்ணலாமா என்று கேட்டபோது லைன் சொல்லுங்கள் என்றார். லைன் சொன்னதும் 2டி ராஜசேகரை சென்று பாருங்கள் என்றார். அப்படித்தான் இந்தப் படம் ஆரம்பித்தது. 

 

படத்தில் நிறைய செட் போட்டிருந்தோம். என்னுடைய படங்களில் இந்தப் படத்திற்காகத்தான் செட் போட்டோம். என்னுடைய முந்தைய படங்களில் அதிகபட்ச செட் வேலை என்றால் அது வெள்ளை அடிப்பதாகத்தான் இருக்கும். எனவே இந்தப் படத்தை எடுக்கும்போதே பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்துவது மாதிரியான உணர்வு இருந்தது. நான் நினைத்தது மாதிரியே இந்தப் படத்தை எடுக்க அனுமதித்த சூர்யா சாருக்கு நன்றி. 

 

யுவன், சாண்டி, சோபி மாஸ்டருடன் வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. என்னுடைய நிறைய ஆசைகள் இந்தப் படத்தில் நிறைவேறியிருக்கின்றன. படத்தின் டைட்டில் சாங் இளையராஜா பாடியிருக்கிறார். இதைவிட பெரிய கொடுப்பினை இந்தத் தலைமுறை இயக்குநர்களில் என்னைத் தவிர யாருக்கும் கிடைக்கவில்லை என நினைக்கிறேன். படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்