ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கிய இப்படத்தின் தயாரிப்புப் பணிக்காக வாங்கிய கடன் தொகையில் ரூ.6.20 கோடி லதா ரஜினிகாந்த் பாக்கி வைத்திருப்பதாகவும் அதனை செலுத்த வேண்டும் என்றும் ஏட் பீரோ நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 3ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது வருகிற 10ஆம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் அப்படி மீறும் பட்சத்தில் லதா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் திருமதி லதா ரஜினிகாந்த் ஏற்கனவே வெளியான செய்திகளை தற்போது மறுத்து நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்.... "சில அச்சு ஊடகங்கள் மற்றும் இனைய செய்தி தளங்களில் கடந்த ஜூலை 3 ,2018 ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாதங்களின் போது கூறப்பட்டவைகளைச் செய்தியாக்கிய ஊடகங்கள், அதற்கு முற்றிலும் மாறாக 3 ஜூலை 2018 ம் தேதி நீதிமன்ற அதிகாரபூர்வ ஆணையில் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களை பற்றி குறிப்பிட்டு இருப்பதை செய்தி நிறுவனங்கள் முழுமையாக குறிப்பிடவில்லை" என கூறி உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் வெளியிட்டுள்ளார்.
அதில்.... "M / S மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் பொறுப்புத் துறப்பு மட்டுமின்றி, முதல் எதிர் மனுதாரரான திருமதி.லதா ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த பதிலானது எதிர் மனுதாரரின் கருத்தினை கேட்காமல் பதிவு செய்ய பட்டிருப்பதோடு ஆணையில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு அவருடைய பொறுப்புகள் இல்லை. எனவே 16 -4 -2018 தேதியில் வெளியான நீதிமன்ற ஆணை செயல்படுத்த முடியாததாக கூறப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, அந்த நிறுவனப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உள்நுழைவதை விட, மனுவின் மீது தீர விசாரணை நடத்தி அதன்படி முடிவெடுப்பது உசிதமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. மேலும் வழக்கு இறுதித்தீர்ப்புக்காக ஜூலை 10 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது" என்று நீதிமன்ற ஆணை வெளியாகியுள்ளது.