கரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி சீரியல்களுக்கான படப்பிடிப்பு தொடங்க சமீபத்தில் தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதி வழங்கியமைக்காகத் ஃபெப்சியும், தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு சமீபத்தில் நன்றி தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஸ்டெப்ஸ் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகை குஷ்பூ நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறித்தும், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, சின்னத்திரை படப்பிடிப்புகள் நாளை முதல் தொடங்க தயாராக உள்ளது. பொது முடக்கம் காரணமாக 70 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். எங்கள் அன்றாட தினக்கூலித் தொழிலாளர்களின் முகங்களில் இறுதியாகப் புன்னகையைப் பார்க்க முடிகிறது. எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் விரைவில் ஒளிபரப்பப்படும்.
ஃபெப்சி தலைவர் ஆர்.கே.சல்வமணி மற்றும் அவரது குழுவின் பெரும் ஆதரவு இல்லாவிட்டால் இது சாத்தியமில்லை. எனது ஸ்டெப்ஸ் சங்க உறுப்பினர்களான சுஜாதா கோபால், பலேஸ்வர், ஷங்கர், பாலு மற்றும் எங்கள் தலைவர் சுஜாதா அவர்களுக்கு என் ஆரவாரமான நன்றிகள். ஒரு பாறை போல் எங்களுடன் துணை நின்ற எனது தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய நன்றி.
கடைசியாக தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. மேலும் அரசு, தலைமைச் செயலகம் மற்றும் எங்களுக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒவ்வொரு துளியும் ஒரு கடலை உருவாக்குகிறது. அதை நாங்கள் நிரூபித்துள்ளோம். கடின உழைப்பு, நேர்மை, நல்ல நோக்கங்கள் ஒருபோதும் தோல்வியடையாது" எனக் கூறியுள்ளார்.