Skip to main content

'50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம்' - கஸ்தூரி ராஜா வெளியிட்ட தகவல்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
kasthuri raja

 

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் கஸ்தூரி ராஜா தற்போது தயாரித்து இயக்கும் படம் 'பாண்டிமுனி'. அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப், நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி மற்றும் ஷாயாஜி ஷிண்டே, சிவசங்கர்,சுமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பாண்டிமுனி' படத்தின் படப்பிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து திருவண்ணாமலை அருகே உள்ள வேட்டவலம் என்ற ஊரில் நடை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் கஸ்தூரி ராஜாவிடம் படம் பற்றியும் படப்பிடிப்பு பற்றியும் கேட்டோம்...

 

 

 


"திருவண்ணாமலை அருகே வேட்டவலம்  ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம்  இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம். அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப் பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது. கைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம். என் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது" எனறார் கஸ்தூரிராஜா.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதோ வரேன்னு போனவர் அரைமணி நேரம் கழித்து வந்தார்... ஆடிப் போய்டேன்' - கஸ்தூரி ராஜா வியப்பு !

Published on 30/01/2019 | Edited on 30/01/2019
kasthuri raja

 

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கும் 'பாண்டி முனி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப். இந்நிலையில் இப்படம் குறித்து அவர் பேசும்போது..."இதில் நான் அகோரியாக நடிக்கிறேன். டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன். ஆரண்ய காண்டம், மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம். என் உருவத்தை மட்டும் அல்ல. என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும். டைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன். நானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன். ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை டிரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார். சிவபக்த அகோரியாக நடிக்கிறேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும் எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் கதை.  

 

 

மேலும் இப்படம் குறித்து இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறியபோது.... "இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் நான் பேசியது ராஜ்கிரண் சாரிடம் தான். அவர் கதையை கேட்டு விட்டு இந்த கதை நிறைய வேலை வாங்கும். மலை, காடு எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும். அவ்வளவு எல்லாம் கஷ்டப்பட முடியாது. என்று சொல்லி விட அதன் பிறகு வேறு சில நடிகர்களையெல்லாம் கடந்து ஜாக்கியிடம் வந்து நின்றது இந்த கதை. கதையை கேட்டு முடித்த அவர் இதோ வருகிறேன் என்று வீட்டுக்குள் போனவர் அரை மணி நேரமாக ஆளையே காணோம். இவரும் நடிக்க மாட்டார் போலிருக்கே என்று வேறு நடிகர்களை மனதுக்குள் ஓட விட்டேன். வெளியே வந்த ஜாக்கி இடுப்பில் மஞ்சள் துணியை கட்டிக் கொண்டு இது மாதிரி தானே காஸ்டியூம் என்று கேட்க ஆடிப் போய் விட்டேன். என் கதைக்குள் இருந்த முனீஸ்வரன் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார். அந்தளவுக்கு சின்சியரான நடிகர் இவர். நடிகராக இல்லாமல் நல்ல நண்பராக பழகிக் கொண்டிருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஹாரர் படமாக 'பாண்டி முனி' வளர்ந்து கொண்டிருக்கிறது" என்றார்.

 


 

Next Story

ஷூட்டிங்கில் சாமி ஆடிய நடிகை 

Published on 07/08/2018 | Edited on 07/08/2018

 

maniyarfamily

 

pandi muni

 

 

 

தனுஷ் நடித்த '3' படத்தையடுத்து ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரிக்கும் படமான 'பாண்டிமுனி' படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. இதில் நாயகனாக புதுமுகம் ஆசிப் நடிக்க, நாயகிகளாக மேகாலி,ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே மற்றும் ஜாக்கி ஷெராப் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து கஸ்தூரி ராஜா பேசும்போது... "பயங்கரமான ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப் பகுதி அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படை யாக வைத்து இந்த கதை உருவாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது ஆச்சர்யமான ஒரு சம்பவம் நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி என்கிற கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 700 வயதாகிறது என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் ஆயிரம் வயதாகிறது என்கிறார்கள். அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள். அது குகைக்கோயில் மாதிரியான இடம். 

 

 

 

அங்கே நாங்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். நாங்கள் வருத்தம் தெரிவித்து விட்டு வந்தோம். மறு நாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்த சென்றோம். சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகாலிக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்து விட்டார்.  நாங்கள் வெல வெலத்துப் போய் விட்டோம். ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. அந்த அனுபவம் ஆச்சர்யமாக இருந்தது. குறிஞ்சிப் பூவை பார்ப்பதே அபூர்வம். நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடத்தை சுற்றிலும் குறிஞ்சி பூ  கண் கொள்ளா காட்சி. அதையும் எங்கள் காமிராவுக்குள் பதுக்கிக் கொண்டோம். அதை விட இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் அந்த குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்க வில்லை என்பது அதிசயமான ஒன்று. கோயிலை சுற்றி உள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம் கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமானது. ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி,யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மற்றும் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் இனைய உள்ளார்" என்றார்.