கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியை தலைவராக இருந்து வழிநடத்தியும் வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கலந்து கொண்டு பேசினார் கமல். அப்போது பேசுகையில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசி வந்தார். மேடைக்கு கீழ் உள்ள மாணவர்கள் தமிழில் பேசச் சொல்லி கூச்சலிட்டனர். பின்பு தமிழில் பேசத் தொடங்கினார். அவர் பேசுகையில், "நான் இங்கு அறிவுரை கூற வரவில்லை. என்னுடைய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். அதற்கான பொறுமை உங்களிடம் இருக்க வேண்டும். காரணம், எனக்கு நிறைய பேர் அவர்களின் அனுபவத்தைப் பகிரத் தயாராக இருந்தும் அதைக் கேட்டுக்கொள்ளும் பொறுமை அன்று இருந்ததில்லை. ஆனால், அந்த பொறுமை இன்று இருக்கிறது. அன்றைய தேவை இன்றில்லை. இன்று வேறு தேவை இருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் லட்சியங்கள் வேறு வேறாக இருக்கும். எனது அப்பாவின் லட்சியம் எனதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் பெற்றோர்கள் முடிவு செய்யவில்லை. அதனால் தான் இங்கு இது மாதிரியாக நிற்கிறேன். கூட்டத்தில் ஒருவனாக நின்றிருப்பேன். எனக்கு கணக்கு, கெமிஸ்ட்ரி உள்ளிட்ட சப்ஜெக்ட் வராது. ஆனால், அது என் வாழ்க்கைக்கு தேவை. எந்த அளவுக்கு தேவை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். நான் என்ன செய்துள்ளேன் என உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதைப் பாருங்கள். என்னைப் போல் சிந்திக்க வேண்டும் என்று அவசியமில்லை. என் சிந்தனைகள் சரியாக இருக்கிறதா என்பதை எடை போட்டுப் பாருங்கள்.
இந்திய மக்களின் சராசரி வயது 29. இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 54. இந்த வித்தியாசம் களையப்பட வேண்டும். மூத்தவர்களை ஒதுக்கிவிட்டு இளம் தலைமுறையினர், இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டும். அரசியல் உங்களை தாக்குவதற்கு முன்னாள் உங்களின் தாக்கம் அரசியலில் இருக்க வேண்டும். உங்கள் அரசியல் உங்களை வழிநடத்தக் கூடாது. நீங்கள் அரசியலை வழிநடத்த வேண்டும்" என்றார். மேலும், அங்கிருக்கும் மாணவர்களிடம் அனைவரும் 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தினார்.