காதல் படத்தின் மூலம் பரவலான கவனம் பெற்று, அதன் பிறகு விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்று தொடர்ந்து கமல்ஹாசன் படங்களில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்த நடிகர் 'காதல்' சுகுமார் தன் திரை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
விருமாண்டி படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் 'கொம்புல பூவ சுத்தி' பாடலில் கோரசும் பாடினேன். அந்தப் பாடல் ஷூட்டிங்கில் டைவ் அடிக்க ஆட்கள் வேண்டும் என்றார் கமல் சார். நானே அடித்துக் காண்பித்தேன். ஆனால், படத்தில் அந்தக் காட்சியில் நான் இல்லை. அப்போது நான் கலங்கியதைப் பார்த்த அவர் என்னை அழைத்து, "உங்களுக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும் என்று அனைவரிடமும் சொல்ல வேண்டாம். எல்லா படத்திலும் உங்களை டைவ் அடிக்கச் சொல்வார்கள். ஒரு காலத்தில் இப்படித்தான் அனைத்து படங்களிலும் என்னை பாடச் சொன்னார்கள்" என்றார். அந்த அட்வைஸ் எனக்கு மிகவும் உதவியது.
வசூல்ராஜா படத்தில் கமல் சாரோடு மட்டுமல்லாமல் பிரபு சாரோடும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஒருமுறை என்னுடைய பிறந்தநாளுக்கு எனக்கு ஒரு ஹெல்மெட் பரிசளித்தார். என்னுடைய பாதுகாப்பு கருதி அதைச் செய்தார். இன்று வரை அந்த ஹெல்மட்டை வைத்திருக்கிறேன். நடிப்பையே தன்னுடைய வாழ்க்கை என்று கருதினார் பிரபு சார். வசூல்ராஜா படத்தில் என்னுடைய சொந்த வசனங்களையும் பேச அனுமதித்தார் கிரேசி மோகன் சார்.
விருமாண்டி படத்தில் நெப்போலியன் சாரோடு நடித்த அனுபவம் சிறப்பானது. அவர் ஒரு குழந்தை போன்றவர். அறை எண் 305ல் கடவுள் படத்தில் சிம்புதேவன் சாரின் இயக்கத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அவரை ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக அதற்கு முன்பே பிடிக்கும். அப்போது அவர் ஆனந்த விகடனில் வேலை செய்து கொண்டிருந்தார். வசனங்கள் உட்பட அவருக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பார். அது சரியாகவும் இருக்கும்.
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் பிரத்தியேகமாக ஒரு மொழியையே உருவாக்கினோம். அதை மிகச் சரியாக திரையில் கொண்டு வந்தார் சிம்புதேவன் சார். சிறந்த இயக்குநர் அவர். நடிகர் சந்தானமும் எனக்கு நீண்ட கால நண்பர். அவருடைய திருமணத்தின்போது சிம்புவுக்கு பத்திரிகை வைக்க விரும்பினார். நான் சிம்புவிடம் பேசி அதற்கு ஏற்பாடு செய்தேன். ஏற்கனவே லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சிம்புவுக்கு பிடித்த ஒரு நடிகராக சந்தானம் இருந்தார்.
சிம்புவால் சந்தானத்தின் திருமணத்திற்கு வர முடியவில்லை. அப்போது அவர் வெளிநாட்டில் இருந்தார். சந்தானத்திற்கு அது பெரிய ஏமாற்றமாக இருந்தது. இதை நான் சிம்புவிடம் தெரிவித்தேன். அவர் திரும்பி வந்தவுடன் சந்தானத்தை சந்தித்து திருமணத்திற்கு வர முடியாததற்கு தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியால் சந்தானத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் மன்மதன் படத்தில் அந்த கேரக்டரை உருவாக்கி சந்தானத்திற்கு வழங்கினார் சிம்பு. அது சந்தானத்திற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.