Skip to main content

"எனக்கு ரெண்டு பேர்..." - காப்பிரைட்ஸ் டென்ஷனுக்கு ப்ரேக் கொடுத்த இளையராஜா

Published on 04/12/2018 | Edited on 04/12/2018

இளையராஜா... ராகதேவன், இசைஞானி என்று தமிழ் திரையுலகால் கொண்டாடப்பட்டவர், படுபவர். சமீப காலமாக தனது பாடல்களுக்கான காப்புரிமை குறித்து இவர் கொடுத்து வரும் குரல், ஆதரவையும் அதை விட எதிர்ப்பு, விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அந்த டென்ஷனில் இருந்து கொஞ்சம் விலகி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் சில நாட்களுக்கு முன்பு எத்திராஜ் கல்லூரி மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இளையராஜா பங்குபெற்றார். அந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவிகளுடன் சேர்ந்து பாடல் பாடிக்கொண்டே, இடையில் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கும் இளையராஜா ஸ்வாரசியமாக பதில் அளித்துவந்தார். அப்போது ஒரு மாணவி “உங்களுக்கு எப்படி இளையராஜா என்ற பெயர் வந்தது?" என்று கேட்டார். அதற்கு இளையராஜா அளித்த பதில்...   

 

ii

 

 

“எனக்கு எங்க அப்பா இரண்டு பெயர் வைத்தார். ஒன்று இராஜய்யா, இரண்டு ஞானதேசிகன். ஸ்கூலில் சேர்க்கும்போது பெயர் சின்னதாக இருக்கட்டும் என்று இராஜய்யா என்ற பெயரில் சேர்த்துவிட்டார். ஸ்கூல் முழுக்க இராஜய்யா எனும் பெயரிலே ஓடியது. அப்புறம் சென்னை வந்து ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு இசைப்பயிற்சி பெறுவதற்கு தன்ராஜ் மாஸ்டரிடம் சென்றேன். எம்.எஸ்.விஸ்வநாதன், அவருக்கு முன்னாடி இருந்த எஸ்.வி வெங்கட்ராமன் போன்ற பெரிய இசை அமைப்பாளர்களெல்லாம் கூட தன்ராஜ் மாஸ்டரிடம்தான் பயிற்சி எடுத்துக்கொண்டு சினிமாவிற்கு வந்து சேருவார்கள். நானும் அவரிடம் பயிற்சி எடுத்துக்கொள்ள போனபோது ‘உன் பேர் என்ன’ என்றார். நான் இராஜய்யா என்றேன். ‘ இராஜய்யா நல்லா இல்ல, நீ ராஜானு வச்சிக்க போ’ என்றார். அதன்பிறகு பஞ்சுஅருணாசலம், நான் கம்போஸ் பண்ண பாட்டுக்காக 'அன்னக்கிளி' என்ற ஒரு படம் எடுத்தார். அப்போது என்னிடம் ஆர்மோனியம் கூட கிடையாது. அவர் ஒரு லாட்ஜில் இருந்தார், அங்கு எனக்கு முன்னாடி ஒரு டேபிள்  இருந்தது. அதில் தாளம் தட்டிக்கொண்டே நான் கம்போஸ் பண்ண பாடல்களை பாடிக்காண்பித்தேன். அதற்கு அவர் ‘இப்போ நான் ஒரு காமெடி படம் எடுக்க கதை எழுதிட்டு இருக்கேன். அதனால் இப்போ இது சரிப்பட்டு வராது. ஆனா இந்தப் பாட்ட எல்லாம் வச்சே  ஒரு படம் எடுத்து அதில் உன்னை இசை அமைப்பாளனாய் சேர்க்கிறேன் என்றார். ஆனால் அதற்கு முன்பாக கோவர்தன் என்பவருடன் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அவரும் ‘வா என்னுடன் சேர்ந்து படம் பண்ணு இசை அமைப்பு கோவர்தன் ராஜா என்று போட்டுக்கொள்வோம்’ என்றார். அதனை நான் இவரிடம் சொன்னேன். அதற்கு இவர் ‘நான் உனக்கு வாய்ப்பு தருகிறேன். ஏன் இன்னோரு பேர் போட வேண்டும்? உன் பெயர் என்ன?’ என்றார். 'ராஜய்யா, ராஜா என்று போட்டுக்கொள்வோமா?' என்றேன். ‘வேண்டாம் ஏற்கனவே ஏ.எம் ராஜா என்று ஒருவர் இருக்கிறார். அதனால் குழப்பமாக இருக்கும்’ என்றார். நான் சரி அப்போ பாவலர் சகோதரர்கள் என்ற பெயர் போடலாம் என்றேன். காரணம் அப்போது நான் பாவலர்ஸ் பிரதர்ஸ் எனும் பெயரில் சில நிகழ்ச்சிகளையும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சில கச்சேரிகளும் பண்ணிக்கொண்டிருந்தேன். அதை கேட்டதும் 'இதுவும் வேண்டாம் பழைய பெயராக இருக்கிறது' என்றார். 'சரி என்ன பண்ணுவது?' என்றேன். 'ஏற்கனவே ஒரு ராஜா இருக்கிறார், உன் பெயரும் ராஜாதான். அதனால் நீ இளையராஜா என்று வைத்துகொள்' என்றார். அப்படித்தான் இளையராஜா எனும் பெயர் வந்தது.  

 

 

சார்ந்த செய்திகள்