Skip to main content

7 ஆஸ்கர் விருதுகள் வென்ற படம்; வரலாற்று சாதனை படைத்த முதல் ஆசிய பெண் நடிகை

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Everything Everywhere All at Once movie grab Oscars with 7 wins

 

2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதில் இந்தியாவின் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவிலும், 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' படம் சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவிலும் ஆஸ்கர் விருது வென்று சாதனை படைத்துள்ளன. முதன்முறையாக இந்திய மொழி சார்ந்த படங்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.  

 

இதில் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று பலரது கவனத்தை ஈர்த்துள்ளது எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All at Once) படம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான இப்படம் ஆங்கிலம், மாண்டரின்(Mandarin), கான்டோனீஸ் (Cantonese) உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியானது. ஆக்‌ஷன், பிளாக் காமெடி, சயின்ஸ் பிக்சன் உள்ளிட்டவை கலந்து திரில்லர் ஜானரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

 

இப்படத்தை டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் ஆகியோர் இயக்க மைக்கேல் யோ, ஸ்டெபானி ஹ்சு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஐஏசி ஃபிலிம்ஸ், கோஸி ஏஜிபிஓ உள்ளிட்ட நான்கு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்திருந்தன. சன் லக்ஸ் என்பவர் இசையமைத்திருந்தார். இப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை ஆகிய 7 பிரிவுகளில் விருதை வென்றுள்ளது. ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக சீன வம்சாவளியை சேர்ந்த நடிகை மிஷேல் யோ ஆஸ்கர் விருது வென்றுள்ளார். முதல் முறையாக ஆசிய பெண் ஒருவர் ஆஸ்கர் விருது வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இவர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.    

 

இதற்கு முன்பாக பென்-ஹர் (1959), டைட்டானிக் (1997) மற்றும் தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங் (2003) உள்ளிட்ட மூன்று படங்கள் தலா 11 ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்