வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. இப்படத்தை க்ரிக்ஸ் சினிமாஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஜெயில்’ திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 'ஜெயில்' படம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்," நிலம்தான் வாழ்வு, நிலம்தான் அடையாளம், நிலம்தான் அதிகாரம், நிலம்தான் போராட்டம், நிலம்தான் யுத்தம், நிலம்தான் இனவிடுதலை, நிலம்தான் வரலாறு, நிலம்தான் சகலமும், நீங்கள் நம்பாவிட்டால் போங்கள். நமது எஜமானர்கள் இதை பரிபூரணமாக நம்புகிறார்கள். அதனால்தான் நமது நிலங்களில் இருந்து நம்மை முற்றாக துரத்தி அடிக்க விரும்புகிறார்கள் என்கிறார் கவிஞர் லிபி ஆரண்யா.
சென்னையில் மட்டும் ஐந்தரை லட்சம் மக்கள் மறுகுடியமர்வில் தங்களின் கல்வி, வேலை, வாழ்வாதாரம் ஆரோக்கியத்தை இழந்துள்ளனர். இந்த ஐந்தரை லட்சம் சென்னையில் மட்டும் என்றால் உலக அளவில் யோசித்துப் பாருங்கள். நிலம் மற்றும் அதன் மீதான நமது வாழ்வு குறித்தும், அதன் விழுமியங்கள் குறித்தும் நாம் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிலத்தோடு தொடர்புள்ள வாழ்வின் சில அறங்கள் மற்றும் மனித இயல்புகள் புலம் பெயர்ந்த நிலத்தோடு தொடர்பற்ற வாழ்வில் சிதைந்து போகும் துயரை இந்த படம் பேசுகிறது. அடித்தட்டு மக்களை குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டதை மட்டும் நோக்கி கேள்வி எழுப்ப போகிறோமா அல்லது அவனை குற்றவாளியாக ஆக்குகின்ற அமைப்பை, அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப போகிறோமா? நான் எப்போதும் ஆணிவேரை நோக்கி என் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். இதைத் தாண்டி படத்தில் இருக்கும் காதல், நட்பு, ஆக்ஷன், போதைப்பொருள் இவையெல்லாம் ஒரு சுவாரசியமான கதையை சொல்வதற்காக பயன்படுத்திக்கொண்ட காரணிகள் மட்டுமே. ஆகையால் அவை மீது பயணம் செய்யாமல் வலுக்கட்டாயமான மறுகுடியமர்வின் சாதக பாதகங்களைப் பற்றி தீவிரமாக விவாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இருளில் புதைந்து கிடக்கும் நகரோடிகளின் மீது ஒரு சிறு வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதுதான் இப்படத்தின் நோக்கம்" என குறிப்பிட்டுள்ளார்.