த்ருவ் விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ஆதித்ய வர்மா. இது தெலுங்கு அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். முதலில் தமிழில் இந்த படத்தை வர்மா என்ற தலைப்பில் இயக்குனர் பாலா, த்ருவ் விக்ரமை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால், திடீரென படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் அந்த படத்தை ட்ராப் செய்து, ஆதித்ய வர்மா என்ற பெயரில் எடுத்து வெளியிட்டது.
இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் விக்ரம் தன்னுடைய மகனுக்காக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட இயக்குனரை போலவே முழு வேலையையும் செய்திருக்கிறார் விக்ரம் என்று சொல்லப்பட்டது. இதற்காக தனக்கு வந்த பட வாய்ப்புகளை கூட தள்ளி வைத்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னை 10 லட்சம் பேர் ஃபாலோவ் செய்வதை முன்னிட்டு அதற்கு காரணம், ஆதித்ய வர்மா படத்தை உருவாக முழு காரணமாக இருந்த தனது தந்தை என்று குறிப்பிட்டு நெகிழ்ச்சியாக ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் த்ருவ் விக்ரம்.
அதில், “இன்று என்னால் பத்து லட்சம் பேருடன் பேச முடிகிறது என்றால் அதற்கு ஒரு மனிதனின் அயராத உழைப்பும், அனைத்து எதிர்ப்புகளையும் மீறி உறுதியாக நின்று இந்த படத்தை உருவாக்கியதும்தான். நான் நம்பிக்கையை இழந்துபோது கூட, அவர் தனியாக சுமையை தன் தோளில் சுமந்து வழி காட்டினார். உன்னுடைய வாழ்க்கை உன் மீதே உனக்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்தும், இதை விட்டுவிடுலாம் என யோசிக்க வைக்கும் ஆனால், எதையும் திரும்பி பார்க்காமல் நமது பணியை சீராக மேற்கொண்டால் எதுவும் சாத்தியம் என்பதை காட்டினார். ஆதித்ய வர்மாவில் அனைத்துமே நீங்கள்தான் அப்பா. என்னதான் ஆதித்ய வர்மா படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், நான் ரசித்தவரிடம் இருந்து வேலையை கற்றுக்கொண்டதனால், அது என் மனதிற்கு நெருக்கமான படமாக எப்போதும் இருக்கும். சாதாரண கான்செப்ட்டான ஆதித்யாவை எனக்காக இந்தளவிற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய திட்டமிடலால் நான் இன்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். நம்முடைய கனவு சாத்தியப்படுவதற்காக நிச்சயமாக நன்கு உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். எனக்கு தெரியும் நான் உங்களை போல ஒரு லெஜண்ட்டாக ஆக முடியாது. ஆனால், அதற்காக நான் பெருமைப்படுகிறேன். பத்து லட்சத்திற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.