கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (22/07/2022) டெல்லியில் இந்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டன. இதில் 'சூரரைப் போற்று' படம் ஐந்து விருதுகளும், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படம் மூன்று விருதுகளும், 'மண்டேலா' படம் இரண்டு விருதுகளும் வென்றுள்ளன. இந்த ஆண்டு மொத்தம் பத்து தேசிய விருதுகள் பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த கலைஞர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய விருது வென்ற சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், " 68-வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருதுகளைக் குவித்து தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கு பாராட்டுகள்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "வசந்த், லக்ஷ்மி ப்ரியா, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படக்குழுவினருக்கும், யோகிபாபு மற்றும் மடோன் அஷ்வின் உள்ளிட்ட 'மண்டேலா' படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள். அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள்! சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்" எனப் பதிவிட்டுள்ளார். இதே போல் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சூர்யா முதல்வர் வாழ்த்து தெரிவித்த பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து , "தங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு சூரரைப்போற்று படக்குழுவினரின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதே போல் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பதிவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா.
தங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு சூரரைப்போற்று படக்குழுவினரின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்…! https://t.co/inpVohim2h— Suriya Sivakumar (@Suriya_offl) July 22, 2022