கார்த்திக் நரேன் 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து, அருண் விஜய்யை வைத்து 'மாஃபியா' படத்தை இயக்கியிருந்தார்.
இதனையடுத்து கார்த்திக் நரேன் தற்போது நடிகர் தனுஷை வைத்து 'மாறன்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மகேந்திரன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ள நிலையில், 'மாறன்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், படக்குழு இது குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேன் அடுத்ததாக நடிகர் அதர்வாவை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதர்வா தற்போது இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் 'குருதி ஆட்டம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அதர்வா - கார்த்திக் நரேன் கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.