பங்களாதேஷ் நாட்டில், பெண்கள் லீடர்ஷிப் கார்ப்பரேசன் என்ற அமைப்பு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி கலந்த கொண்டு நடனமாடி விருதுகளை கொடுப்பதாக இருந்தது.
இந்நிலையில் நடிகை நோரா ஃபதேஹி பங்கேற்கவுள்ள நடன நிகழ்ச்சிக்கு பங்களாதேஷ் நாடு அனுமதி தர மறுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அரசாங்கம், "உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், அன்னியச் செலாவணி கையிருப்பைப் பராமரிக்கும் நோக்கத்திலும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டாலர்களை மிச்சப்படுத்தும் முயற்சியிலும் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் 46.13 பில்லியன் டாலராக இருந்த அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த 12 ஆம் தேதி 36.33 பில்லியன் அளவுக்கு சரிந்தது. இது அடுத்த நான்கு மாதம் தேவையான பொருள்களை இறக்குமதி செய்ய போதுமானதாக இருக்கிறது. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தச் சர்வதேச நிதியம் தனது குழுவை இம்மாத இறுதியில் பங்களாதேஷ் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
இந்நிகழச்சியில் கலந்து கொள்வதற்காக நோரா ஃபதேஹிக்கு அமெரிக்க டாலரில் கொடுக்க வேண்டும். அமெரிக்க டாலரில் கொடுத்தால் ஏற்கெனவே இருக்கும் டாலர் சேமிப்பு மேலும் குறைந்துவிடும் என கருதி நிகழ்ச்சிக்கு தடை விதித்துள்ளது பங்களாதேஷ்.