இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடைப்பெற்ற தீவிரவாத வெடிக்குண்டு தாக்குதலில் 390 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 500 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்பட்ட நேஷனல் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஜக்ரன் ஹசீம் ஹோட்டல் ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக இலங்கை அதிபர் சிறிசேனா உறுதி செய்தார். இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீன் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன, பின்னர் இது மறுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது கொழும்புவில் வசிக்கும் அனைத்து மக்களின் வீடுகளில் சோதனை நடத்த அதிபர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோதனை நடத்தப்படும் எனவும், கொழும்பு பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் மக்கள் தங்கள் பெயரை அரசிடம் முறையாக பதிந்துகொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.