வடகிழக்கு பருவமழையால் தமிழகமே வெள்ளக்காடாக மாறியிருந்தது. மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தனர். போர்க்கால நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு விசிட் அடித்து மக்களின் துயரங்களைப் போக்க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துவந்தார். மேலும், வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்யவும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர்கள் குழுவை அமைத்து அவர்களும் துரித பணியாற்றினர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளப்பகுதிகளை பார்வையிட்டு, மக்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுப்பதிலும், அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் தீவிரமாக களப்பணியாற்றினார் அத்தொகுதி எம்.பி. கனிமொழி.
அதித கனமழையைச் சந்தித்த தூத்துக்குடியின் பெரும்பாலான பகுதிகளை வெள்ள சூழ்ந்தது. அதனால், மாவட்ட எம்.பி.யான கனிமொழி அதிகாரிகளுடன் பேசி அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுத்தார்.
இந்த நிலையில், குரும்பூர் அருகே உள்ள கடம்பாகுளம் கால்வாய் உடைந்ததால், ஊருக்குள் வெள்ளம் பாயும் அபாயம் இருந்தது. உடனே ஊர் மக்கள் பலரும், கனிமொழியை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கனிமொழி, மாவட்ட கலெக்டருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். மேலும், அவரும் உடனடியாக கால்வாய் உடைப்பு பகுதிக்குச் சென்றார்.
அதிகாரிகள் வருவதற்கு முன் ஸ்பாட்டுக்குச் சென்ற கனிமொழி, கால்வாய் உடைப்பை பார்வையிட்டார். அதேசமயம், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். கால்வாய் உடைந்து வெள்ளம் வெளியேறிக் கொண்டிருக்கும் பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர் அதிகாரிகள். பணிகள் வேகமெடுத்தன. அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தார் கனிமொழி. நேரம் கடந்து கொண்டே இருந்தது. நள்ளிரவு 1 மணியை தாண்டியும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
கால்வாய் சரி செய்யப்படுவதை கவனித்துக் கொண்டிருந்த கனிமொழி, அங்கிருந்து நகரவில்லை. அப்போது அதிகாரிகள், “மேடம், நள்ளிரவு 1 மணிக்கு மேலே ஆய்டுச்சு. கால்வாயை சீரமைக்க இன்னும் 2 மணி நேரம் ஆகலாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் கிளம்புங்கள் மேடம்” என்று சொல்லிப் பார்த்தார்கள். இருந்தும் கனிமொழி பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார்.