நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி யாருக்கு என்ற முட்டல் மோதல்கள் பலமாக உள்ளதாம். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் ஆர்.வி. பரதன், தனக்கு திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்கள் கட்சிக்காக வேலை செய்வார்கள் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கையோடு போக, திருச்சி தொகுதிப் பொறுப்பாளரான மாஜி தங்கமணியும் ஆமோதித்துள்ளார். ஆனால் திருச்சி தொகுதியை கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் கரிகாலனின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையாவுக்கே கொடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடக்கு மா.செ. விஜயபாஸ்கர் மதியம் வரை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் தான், திருச்சியை தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒதுக்குவது வரை போன எடப்பாடி, தேமுதிகவுக்கு தஞ்சை தொகுதியை கொடுத்துவிட்டு திருச்சியை நிலுவையில் வைத்துள்ளார். தொகுதிப் பொறுப்பாளரான தான் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு சீட் கிடைக்கவிடாமல் தான் பரிந்துரைக்கும் பாசறை கருப்பையாவுக்கு சீட் வாங்க மோதும் விராலிமலை விஜயபாஸ்கரிடம், உங்கள் பொறுப்பு தொகுதியை மட்டும் கவனியுங்கள். என் பொறுப்பு தொகுதிக்குள் வரவேண்டாம் என்று தங்கமணி விராலிமலை விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருச்சி தொகுதி சீட்டுக்காக அதிமுக மாஜிக்களின் மோதல்கள் உச்சத்தில் இருப்பதால் விடியும்போது சீட் யாருக்கு என்று முடிவெடுப்பார் எடப்பாடி என்கிறார்கள் விவரமறிந்த ர.ர.க்கள். பரதனிடம் பேசிய எடப்பாடி, நாளைய விடியல் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை கூறி இருப்பதாகவும் பேசுகின்றனர். அதே நேரத்தில் மா.செ. விஜயபாஸ்கர், சீட் எனக்குத்தான் வாங்கித் தருவார் நான் தான் வேட்பாளர் என்று கட்சியினரிடம் சொல்லி வாழ்த்துகளையும் பெற்று வருகிறார் பாசறை கருப்பையா.