சேலத்தில் உள்ள பிரபல தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில், பாடவேளையில் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவனின் கையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையத்தில் செந்தில் பப்ளிக் பள்ளி என்ற தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில், சேலம் குரங்குச்சாவடியைச் சேர்ந்த சுபத்ரா என்பவரின் மகன் சர்வேஷ் (15), பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இவருடைய தங்கையும், இதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.
சிறுவன் சர்வேஷ் இடக்கை பழக்கம் உள்ளவர். இந்நிலையில், டிசம்பர் 6ம் தேதியன்று, சர்வேஷ் வைத்திருந்த குடிநீர் பாட்டிலை சக மாணவர் ஒருவர் எடுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு சர்வேஷ், அந்த குடிநீர் பாட்டில் தன்னுடையது என்று கூறி அவரிடம் இருந்து பிடுங்க முயற்சித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பாடவேளையில் மாணவர்கள் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த ஆங்கில பாட ஆசிரியர் லூர்து ஆண்டனி என்பவர், மாணவர் சர்வேஷிடம் என்ன ஏதென்று விசாரிக்காமலேயே அவனுடைய இடக்கையைப் பிடித்து வேகமாக முறுக்கியிருக்கிறார்.
சர்வேஷ் வலியால் துடித்து அழுததால் ஆசிரியர் அந்த வகுப்பறையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றபோது சர்வேஷின் இடக்கை பெரிதாக வீக்கமடைந்துள்ளது. இதைப் பார்த்த அவனுடைய தாயார் சுபத்ரா, அதிர்ச்சியடைந்தார். மகனிடம் விசாரித்தபோது, பள்ளியில் நடந்த சம்பவத்தைக் கூறியிருக்கிறார். உடனடியாக அவர், மகனை அழைத்துச் சென்று கருப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தார். மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுவனின் இடக்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ஆசிரியர் லூர்து ஆன்டனி கையைப் பிடித்து முறுக்கியதால்தான் மகனின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
உடனடியாக சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் கட்டு போட்டுவிட்டனர். சிறுவனின் கையில் பிளேட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இதற்காக சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செலவு செய்ததாக சொல்லப்படுகிறது.
ஆசிரியரின் காட்டுமிராண்டித்தனத்தால் மகனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். விரைவில் சி.பி.எஸ்.இ. வாரியத் தேர்வுகள் நடக்க உள்ள நிலையில், மகனைத் தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்றதோடு, சிகிச்சை செலவுகளையும் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளனர். விவகாரம் பெரிதாகாமல் இருப்பதற்காக, பள்ளி நிர்வாகமும் அப்போதைக்கு இதற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதனால், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் பள்ளி மீதும், ஆசிரியர் மீதும் காவல்துறையில் புகார் அளிக்காமல் தவிர்த்துவந்தனர். பள்ளி நிர்வாகமும் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கப் பார்த்தது. இதற்கிடையே, சர்வேஷின் வகுப்பு மாணவர்கள் மூலம் இந்த விவகாரம் மெதுவாக வெளியில் கசியத் தொடங்கியது.
இதையடுத்து, சர்வேஷின் பெற்றோர் டிச. 9ஆம் தேதியன்று, சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் செந்தில் பப்ளிக் பள்ளி ஆசிரியர் லூர்து ஆன்டனி மீது புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, பள்ளி நிர்வாகமும் அந்த ஆசிரியரைப் பணியிடைநீக்கம் செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து செந்தில் பப்ளிக் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் சுந்தரேசனிடம் டிச. 9ம் தேதி இரவு கேட்டபோது, ''நீங்கள் குறிப்பிடும் சம்பவம் குறித்து இன்றுதான் எனக்குத் தெரியவந்தது. ஆனாலும் என்ன நடந்தது என்று முழுமையாக விசாரிக்கவில்லை. தற்போது, திருமண விழாவுக்காக வெளியூர் செல்கிறேன். ஊர் திரும்பியவுடன் விசாரித்து பதில் சொல்கிறேன்” என்றார். அதன் பின்னர் நம்முடைய செல்ஃபோன் லைனுக்கு அவர் வரவே இல்லை.
இதையடுத்து, நாம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது, “செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பள்ளி தரப்பில் அறிக்கை கேட்டிருக்கிறோம். அந்த அறிக்கை கிடைத்த பிறகுதான் நம் தரப்பில் விசாரணையை தொடங்க முடியும்'' என்றார்.
மீண்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் டிச. 10ஆம் தேதி தொடர்பு கொண்டபோது, ''மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அந்த ஆசிரியரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை தரப்பிலும் விசாரணை நடத்தப்படும்'' என்றார்.
அரசுப் பள்ளிகளில், புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மீது விளக்கக் கேட்பு குறிப்பாணை கூட வழங்காமல் எடுத்த எடுப்பிலேயே பணியிடைநீக்க நடவடிக்கை எடுப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் மீது ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.
மற்றொருபுறமோ, பிரபலமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சிறுவனின் கை எலும்பு முறிக்கப்பட்ட சம்பவம் நடந்தும்கூட முறையான, விரைவான விசாரணை நடத்தாமல் பள்ளி நிர்வாகத்தை மயிலிறகால் தடவிக் கொடுப்பதாகவும் அவர் மீது விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.