வேதாரண்யம் அருகே வடிகால் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டிய தனியார் பள்ளி நிர்வாகத்தால் 35 ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி பணிகள் தொடர முடியாமல் பரிதவித்து வருவதாக ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்..

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட கருப்பம்புலம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் செயல்பட்டு வரும் அகரம் என்கிற தனியார் பள்ளி, பழமை வாய்ந்த வடிகால் வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியிருப்பதால், 35 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் விவசாய பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வடிகால் வாய்க்கால் தனியார் பள்ளி நிர்வாகத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் மழை வெள்ளப்பாதிப்பில் பயிர்கள் மூழ்க கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டுக்கான சம்பா சாகுபடி பணிகளை தொடங்காமல் நாகை மாவட்ட ஆட்சியரிடம் இன்று நான்காவது முறையாக மனு அளித்தனர்.

"வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பயிர்கள் மூழ்கும் அபாய நிலை ஏற்படுவதால் விவசாய பணிகளை தொடங்கவில்லை," என்று அந்த மனுவில் கூறியுள்ளனர் அப்பகுதி விவசாயிகள். மேலும்,"மழை காலத்திற்குள் ஆக்கிரமிப்புகள் முழுவதும் அகற்றி தனியார் பள்ளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், " என்றும் கூறியுள்ளனர்.