திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற நான்காவது நாளே சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்துள்ள லட்சுமாங்குடியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தனது பிள்ளைகளின் படிப்பிற்காகவும், வாங்கிய கடனை அடைக்கவும் சுயமாக நடத்திவந்த காய்கறி கடையில் ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்கும் வெளிநாடு செல்ல முடிவெடுத்து ஏஜென்ட் மோகனா என்கிற ஆந்திரா பெண் ஒருவர் மூலம் கடந்த 3ஆம் தேதி குவைத் நாட்டிற்கு சென்றார்.
அங்கு சென்றதும், நான் குவைத்திற்கு வந்து வேலைக்கு வந்துவிட்டேன் என்று முதலில் பேசியிருக்கிறார். அதன் பிறகு சொன்ன வேலை வேற, பார்க்குற வேலை வேறையா இருக்கு, ஆடு, ஒட்டகம் மேய்க்க பாலைவனத்தில் விட்டுட்டாங்க, வேலை ரொம்ப கஷ்டமா இருக்கு என தனது வீட்டில் உள்ளவர்களிடமும், ஏஜென்ட் மோகனாவிடமும் அழுதிருக்கிறார். அதோடு என்ன உடனே இந்தியாவுக்கே திரும்ப அனுப்பிடுங்க, மூட்டைத்தூக்கியாவது அங்கேயே பிழைச்சிக்கிறேன் என அங்குள்ள ஒட்டக முதலாளியிடமும், அனுப்பிய ஏஜெண்டிடமும் மன்றாடி கேட்டிருக்கிறார்.
ஏஜெண்ட் மோகனாவோ அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் நூற்றில் ஒருவராக முத்துக்குமாரையும் விட்டுவிட்டார், உடனடியாக அவரை மீட்டு இருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் ஏஜென்ட் மோகனாவின் அலட்சியத்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது உறவினர் தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.
கடைசியாக ஏழாம் தேதி இரவு அதே பகுதியில் பணியாற்றும் கூத்தாநல்லூரை சேர்ந்த தனது நண்பர் ஒருவரிடம் தனக்கு நடக்கும் துயரங்கள் குறித்து முத்துக்குமார் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென போன் உடைக்கும் சத்தம் அவரது நண்பருக்கு கேட்டுள்ளது. அதன் பிறகு முத்துக்குமாருக்கு அவருடைய நண்பர் தொடர்ந்து தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்பொழுது குவைத் முதலாளிகள் அவரை கடுமையாக தாக்கி சுட்டுக் கொன்றதாக தெரிகிறது. குவைத் நாட்டில் உள்ள ஊடகங்கள் துப்பாக்கியால் சுட்டு இந்தியர் பலியான செய்தியும் வெளியிட்டது. அதன் பிறகே 9ஆம் தேதி முத்துக்குமரன் மனைவி வித்யாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரது உடலை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை குவைத் அரசு எடுக்க, இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று கூத்தாநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பேரணியாக சென்று தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர்.