சென்னை பெருங்குடியில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், '' ஆரம்ப காலத்திலேயே, 2017 ஆம் ஆண்டே நீட்தேர்வு கூடாது தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுங்கள். சட்டமன்றத்தில் நிறைவேற்றும் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்ற நிலைப்பாட்டினை தெரிவித்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றம் செய்து ஒருமித்த ஆதரவை அளித்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக.
தொடர்ந்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு கொண்டு போனதற்குப் பிறகு அதிமுகவை சேர்ந்த எந்த அமைச்சர்களும் குடியரசுத் தலைவரிடம் உட்கார்ந்து நீட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற எங்கள் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று கேட்கவில்லை. ஒரு நாளும் போகவில்லை. அந்த நிலையில் குடியரசு தலைவர் மறுதலித்தார். அவர் மறுத்தலித்த அந்த தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகமும் திருப்பி அனுப்பிவிட்டது.
தீர்மானத்தை திருப்பி அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சகத்தை போய் யாரும் ஏன் திருப்பி அனுப்பினீர்கள், எங்கள் உணர்வின் ஒட்டுமொத்த கூப்பாடு அல்லவா இது. சட்டமன்றத்தில் நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினோமே அதற்கு என்ன மதிப்பளிதீர்கள். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்து இருக்கிறார். நீங்களும் திருப்பி அனுப்புகிறீர்கள் என்றும் யாரும் கேட்கவே இல்லை. அப்போதெல்லாம் கேட்காமல் இருந்து விட்டு இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.
நீட் வேண்டாம் என்பது திமுகவின் மிக முக்கிய அம்சம். நீட் வந்தபோது முதல் முதலில் அதற்கு எதிராக பல்வேறு கருத்தரங்கை நடத்தியது திமுக. பல்வேறு போராட்டங்களை நடத்தியது திமுக. பல்வேறு இடங்களில் அதை எதிர்த்து குரல் கொடுத்தது திமுக. அந்த வகையில்தான் தேர்தல் அறிக்கையில் தெளிவாகச் சொன்னார்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட்டுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுப்போம் என்று. முதல் நடவடிக்கையாக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல் மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவை டெல்லியிலேயே முகாமிட வைத்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு அலுவலர்கள் மற்றும் அமைச்சர்களை நேரடியாகச் சென்று முறையிடவும் செய்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தார். அந்த குழு ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.