கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராகக் கடந்த 2019 ஆம் ஆண்டு தற்போதைய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் சாட்சிகளைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் வளாகத்திலேயே இருக்கக் கூடிய மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இயலாது எனவும், தனது வீட்டிலேயே சாட்சியைப் பதிவு செய்ய வழக்கறிஞரை ஆணையராக நியமிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நேரில் ஆஜராகி எடப்பாடி பழனிசாமி சாட்சியம் அளிக்க விலக்கு அளித்ததோடு, அந்த நடைமுறையை அவருடைய வீட்டிலேயே மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியினுடைய உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். மகாதேவன், முகமது சபிக் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அப்போது மாற்று நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காக, அவர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற கருத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாகத் தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி மாற்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராக அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (05.01.2023) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் அறிவுறுத்தினீர்களா என எடப்பாடி பழனிசாமியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் பொங்கல், சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளதால் அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி ஆஜராக தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமியை ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.