சென்னையில் இருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேறும் நிலையில், அதே இடத்தில் வேறொரு நிறுவனத்தைக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ்நாடு அரசின் தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னையை அடுத்த மறைமலைநகரில் அமைந்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ரூபாய் 5,161 கோடியை முதலீடு செய்து கார் உற்பத்தியை செய்துவரும் ஃபோர்டு நிறுவனம், கரோனா பரவல், வாகன விற்பனை சரிவு, விற்பனை செலவை விட உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தனது தொழிற்சாலைகளை மூடும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இனி வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யவும், இங்குள்ள பழுது நீக்கும் மையங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவும் ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மறைமலை நகரில் 400-க்கும் அதிகமான ஏக்கரில் செயல்படும் ஃபோர்டு நிறுவனம் மூடப்படும் நிலையில், அதனை ஏற்று நடத்துவது தொடர்பாக ஃபோர்டு நிறுவனம் மற்றும் பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அப்படி எந்த நிறுவனமேனும் தொழிற்சாலையை ஏற்று நடத்த முன்வந்தால் சுமுகமாக முடிக்க தமிழ்நாடு அரசு மத்தியஸ்தம் செய்யும்.
எனினும், சோழிங்கநல்லூரில் செயல்பட்டுவரும் ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மூடப்படவில்லை என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியேறும் ஐந்தாவது ஆட்டோமொபைல் நிறுவனம் ஃபோர்டு என்பது குறிப்பிடத்தக்கது.