தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாநகரம், நகரம், பேரூராட்சி, கிராம ஊராட்சியின் தெருக்கள், வீடுகள், மூலை முடுக்கெல்லாம் கிருமி நாசினி தெளிக்கவேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது தமிழக சுகாதாரத்துறை. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கிராமங்களில் கிருமி நாசினி தெளிக்கவும், வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்களை மாவட்ட ஊராட்சி அதிகாரிகள், கிராம ஊராட்சி செயலாளர்களை வரவைத்து வழங்கி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குநர் ஜெயசுதா ஏற்பாட்டில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் வைத்து வழங்கினார். அதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கந்தசாமி, மாவட்டத்தில் உள்ள 860 கிராம பஞ்சாயத்துக்களில் கிருமி நாசினி தெளிக்க ஒரு சிறப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த குழு பயணம் செய்ய 10 பேருந்து பனிமனைகளில் இருந்து 250 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த குழு ஒவ்வொரு கிராமமாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும். அடுத்த 3 நாட்களில் இந்த பணி மாவட்டம் முழுவதும் முடிவடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு எனப் பல ஒன்றியங்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் அந்த ஊராட்சிகளின் ஊராட்சி செயலாளர்களை வரவைத்து அவர்களுக்கு இயந்திரம் மற்றும் கிருமி நாசினியை வழங்கி சிறப்பு பேருந்துகள் கிராமங்களுக்கு அனுப்பிவைத்தனர் மாவட்ட அதிகாரிகள். இதற்காக வந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களில் 100க்கு 90 சதவிதம் பேர் முகத்தில் மாஸ்க் அணியவில்லை. அதோடு அவர்கள் கூட்டமாக ஒரேயிடத்தில் குழுமியிருந்தனர். இந்தக் குழு கூடல் தான் வைரஸ்சை பரப்புகிறது என தெரிந்தும் மாவட்ட அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் வேலை வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்