கோவை மாவட்டம் தேவராயபுரத்தில் நடந்த திமுக கிராமசபைக் கூட்டத்தில், அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை தொண்டாமுத்தூரில் ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபைக் கூட்டம் நடந்தது. அதில் திடீரென்று எழுந்து பேசிய ஒரு பெண்ணிடம், “நீங்க எந்த ஊரும்மா?” எனக் கேட்டார் ஸ்டாலின். உடனே அந்தப் பெண், “எந்த ஊருன்னு கூடத் தெரியாம எதுக்கு கிராம சபைக் கூட்டம்” என ஒருமையில் பேசினார். உடனே கோபமான கட்சியினர், அந்தப் பெண்ணை வெளியேறுமாறு கூறினர். அப்போது அந்தப் பெண், ஸ்டாலினுக்கு எதிராகக் கோஷமிட்டார். உடனே போலீஸ் அந்தப் பெண்ணை அங்கிருந்து மீட்டுச் சென்றது. அந்தப் பெண்ணின் பெயர் வி.பூங்கொடி. அதிமுகவின் மாநில மகளிரணி துணைத் தலைவராக இருக்கிறார். வாளையார் ரோடு சுகுணாபுரத்தில் பூங்கொடியின் வீடு இருக்கிறது என்பது தெரியவந்தது.
மேலும், கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் தொண்டாமுத்தூர் வரை வந்திருக்கிறார் எனவும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கிராமசபைக் கூட்டத்தின் நிறைவில், திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வேலுமணி, பட்டியல் இனப்பெண் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது. ஸ்டாலின் மக்கள் சபைக் கூட்டம் நடத்துகிறார். அதுவும் 2,000 ஆண்டு பழமையான கோவிலை மறித்துக் கூட்டம் போட்டுள்ளார்கள். கேள்வி கேட்கும் பொழுது பொறுமையாகப் பதில் சொல்லலாம். ஆனால், அதற்காக கட்சிக்காரர்களை விட்டு தாக்கவைத்தது மிகவும் தவறு என்றார்.
இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பிரச்சனை செய்த பெண் குறித்து டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.