காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டம், தென் மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம், சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள்மீது கடந்த ஆட்சிக் காலத்தில் போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வழக்குகளைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்த அறிவிப்பைக் கேட்டு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதிய அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்க்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுபற்றிய செய்திகள் நக்கீரன் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (24.06.2021) தமிழ்நாடு அரசு மீத்தேன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலை ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் போராட்ட வழக்கு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்தது. இந்த சந்தேகத்தைப் போக்கும் விதமாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்ட ஆடியோவில், ஹைட்ரோ கார்பன் வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் போராட்ட வழக்கில் உள்ளவர்கள் நக்கீரர் சிலை முன்பு திரண்டு மரக்கன்றுகளை வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். இதுகுறித்து கண்ணன், வடகாடு சரவணன் ஆகியோர் கூறும்போது, “விவசாயிகளைப் பாதிக்கும் திட்டமான நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தன்னெழுச்சியாக கீரமங்கலம், வடகாடு, கைகாட்டி, ஆலங்குடி, நல்லாண்டார்கொல்லை ஆகிய இடங்களில் போராடிய தற்போதைய அமைச்சர் மெய்யநாதன் உள்பட நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். இதற்காக தொடர்ந்து நீதிமன்றம் சென்று வருகிறோம். தற்போது இந்த வழக்குகளைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல ஒ.என்.ஜி.சி.யால் அமைக்கப்பட்டு விவசாயிகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் எண்ணெய் கிணறுகளையும் பாதுகாப்பாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.