திருச்சி மாவட்டம் காரைக்குடியில் உள்ள சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தவர் மருதாம்பாள். கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி இவரிடம் தொட்டியம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், காவல்துறையில் பணியாற்றும் அவருடைய தம்பி தமிழ்ச்செல்வன் ஆகியோர் காய்கறி வாங்க பேரம் பேசியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை அங்கு கரும்பு வியாபாரம் செய்துகொண்டிருந்த மருதாம்பாளின் மகன் தர்மராஜ் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த சிவக்குமாரும், தமிழ்ச்செல்வனும் தர்மராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தொட்டியம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து சிவகுமார், தமிழ்ச்செல்வன், அரசு, சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்டம் 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வாதம் நிறைவடைந்ததையடுத்து 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, இந்த வழக்கில் நீதிபதி ஜெயக்குமார் நேற்று (16.12.2021) தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சிவக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதேபோல் காவல்துறையில் பணியாற்றும் தமிழ்ச்செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கிலிருந்து அரசு, சக்திவேல் ஆகியோரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.