Published on 28/06/2021 | Edited on 28/06/2021

சென்னையில் எஸ்பிஐ டெபாசிட் செய்யும் இயந்திரங்களைத் தேர்வுசெய்து வடமாநில கொள்ளையர்கள் கடந்த வாரம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏடிஎம்களில் இருந்து 48 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்தச் சம்பவம் ஏடிஎம் கொள்ளைக்குப் பெயர்போன மேவாட் கொள்ளையர்களால் நடத்தப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்று கொள்ளையர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், 23ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் அமீர் ஆர்ஷ் என்ற கொள்ளையனைக் கைது செய்த நிலையில், தற்போது இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.