ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதைப் போல, நகைகளைக் குவியலாக அணிந்துகொண்டு ஜோக்கர் கெட்டப்பில் வலம் வந்தாலும், தனது ரவுடித் தனத்தை வரிச்சியூர் செல்வம் தொடரவே செய்திருக்கிறார். 2020-ல் மதுரை வரிச்சியூர் அருகே குன்னத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணராஜனும், ஊராட்சி மன்றப் பணியாளர் முனிச்சாமியும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் 4-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இவரை சென்னைக்கு தப்பிச் சென்றுவிடுமாறு வரிச்சியூர் செல்வம் கூறிய நிலையில் மாயமானார். குற்றவாளி செந்தில்குமாரை கண்டுபிடித்து கைது செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்குமார் மனைவி முருகலட்சுமியும், தனது கணவர் காணாமல்போனதாக விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையிலும் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தவேண்டும் என மனு அளித்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், அருப்புக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண் காரத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் தேடுதலும் தீவிரப்படுத்தப்பட்டது.
வரிச்சியூர் செல்வம் கைதான பின்னணி இது:
காணாமல்போன செந்தில்குமாரின் செல் போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, வரிச்சியூர் செல்வத்திடமும், திருவான்மியூர் சாம் குமாரிடமும் பேசியது தெரியவந்துள்ளது. வரிச்சியூர் செல்வத்தின் தூண்டுதலினால் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டதை சாம்குமார் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
வரிச்சியூர் செல்வத்துடன் பிரச்சனையானதால், அவரிடமிருந்து பிரிந்து விருதுநகரில் குடியேறிய செந்தில்குமார், சமாதானம் பேச அழைக்கப்பட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சென்னையில் ஆள் கடத்தல் அசைன்மெண்ட் ஒன்றை செந்தில்குமாரிடம் தந்த வரிச்சியூர் செல்வம், கூடவே இரண்டு நபர்களை அனுப்பி வைத்துள்ளார்.
வரிச்சியூர் செல்வத்தின் உள்நோக்கத்தை அறியாத செந்தில்குமாரை, உடன் சென்ற இருவரும் மாமல்லபுரம் திருவடந்தை காட்டேஜ் ஒன்றில் தங்கவைத்துள்ளனர். பிறகுதான் அந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். இரண்டுபேர் செந்தில்குமாரைத் திமிரவிடாமல் பிடித்துக்கொள்ள, ஒருவர் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். நடந்ததை எல்லாம் வாட்ஸ்-அப் காலில் வரிச்சியூர் செல்வத்துக்கு காட்டியுள்ளனர். அதன்பிறகு, செந்தில்குமாரின் இரண்டு கைகளும் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து செந்தில் குமாரின் உடலை கம்பளியால் சுற்றி தூத்துக்குடி மாவட்டம் முரப்பநாட்டுக்கு எடுத்துவந்து தாமிரபரணி ஆற்றில் வீசியிருக்கின்றனர்.
காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் செந்தில்குமார் கொல்லப்பட்டதை ஒத்துக்கொண்ட வரிச்சியூர் செல்வம், கொலைக்கான காரணத்தை இவ்வாறுதான் பதிவு செய்யவேண்டும் என்று கெஞ்சியிருக்கிறார். “என்னை மீறி செந்தில்குமார் வளர்ந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். எனக்கு துரோகமும் செய்தான். அதனால்தான், அவன் கொலை செய்யப்பட்டான்” என்று கூறியிருக்கிறார்.
செந்தில்குமார் கொலையை வரிச்சியூர் செல்வம் வாட்ஸ்-அப் காலில் பார்த்து ரசித்ததன் பின்னணியில் வலுவான சொந்த விவகாரம் ஒன்று இருக்கிறது. வரிச்சியூர் செல்வத்தின் உறவுகளில் ஒன்றை தொந்தரவு செய்ததாலேயே செந்தில்குமாரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் இந்த உண்மையைப் பதிவு செய்துவிடவேண்டாம் என்பதே வரிச்சியூர் செல்வத்தின் கோரிக்கையாக இருந்திருக்கிறது.
ஆள் கடத்தல், கொலை செய்தல், சட்ட விரோதமாக உடலை மறைத்தல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வரிச்சியூர் செல்வம், 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.