பொதுவாகவே ஒரு கிராமத்தை காண்பித்தால் அதில் பெரும்பாலானது மிகுந்த வறட்சியுடன் காணப்படும். ஒரு இளம் காதல் ஜோடி இருப்பர், அவர்களை சேர விடாமல் ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் எதிர்பார்கள். வெட்டு குத்து நடக்கும், ஜாதி பிரச்னைகள் எழும், முக்கியமாக பழைய பஞ்சாங்கத்தை கட்டி அழுவர். இப்படியாகப்பட்ட கதையம்சம் கொண்ட கிராமத்து படங்களை தான் நாம் பெரும்பாலும் இவ்வுளவு நாட்கள் தமிழ் சினிமாவில் பார்த்து வருகிறோம். இதையெல்லாம் தவிர்த்து ஒரு கிராமம் இருக்குமா..? மிகுந்த முதிர்ச்சியடைந்த மனப்பான்மையும், பகுத்துத்தறிவு கொண்ட மனப்பான்மையும் கொண்ட கிராமத்து கதைகள் உண்டா...? என்ற கேள்வி நம்முள் எழும். அப்படியான ஒரு கிராம கதை இருந்தால்.....
உதயநிதி ஸ்டாலின் ஒரு வளாகத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். அதே வளாகத்தில் எம் எஸ் பாஸ்கரும் போட்டோ பிரேம் கடை நடத்தி வருகிறார். இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினும் பார்வதி நாயரும் சிறு வயது முதல் காதலிக்கின்றனர். பணம் சம்பாதிக்கும் பிரதான குணம் படைத்த பார்வதி நாயர், ஒரு கட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை நிராகரித்து வீட்டில் பார்த்த பணக்கார மாப்பிளையை மணக்கிறார். அப்போது ஒரு நாள் உதயநிதி ஸ்டாலின் கடை வளாகத்தின் எதிரே எம் எஸ் பாஸ்கரை ஒருவன் சண்டைக்கு இழுக்க, அப்போது அதை தடுக்க எம் எஸ் பாஸ்கரின் உதவியாளராக இருக்கும் கருணாகரன் வருகிறார். அவரை சண்டைக்கு இழுத்த ஒருவனின் நண்பனாக வரும் சமுத்திரக்கனி அடித்து விடுகிறார். பின்பு சமுத்திரக்கனியை தட்டிக்கேட்க சென்ற உதயநிதி ஸ்டாலினையும் சமுத்திரக்கனி அடித்து துவைத்து சென்று விடுகிறார். இதை அந்த ஊர் மக்கள் பார்த்து விடுகின்றனர். இதனால் மனமுடைந்த உதயநிதி ஸ்டாலின், என்னை அடித்த சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என சபதம் செய்கிறார். பின்பு சமுத்திரக்கனி இருக்கும் இடத்தை அறிந்த உதயநிதி ஸ்டாலின் அவரை தேடி அடிக்க சென்று பார்க்கும்போது, அங்கே சமுத்திரக்கனி இல்லாமல் வேலைக்காக முன்பே துபாய்க்கு சென்று விடுகிறார். இதனால் காலில் செருப்பு இல்லாமலே திரியும் உதயநிதி ஸ்டாலின் ஒரு கட்டத்தில் சமுத்திரக்கனி தங்கை என்று தெரியாமல் நமீதா பிரமோத்துடன் காதல் வயப்படுகிறார். இருவரும் காதலிக்கும் வேளையில், ஒரு நாள் நமீதா பிரமோத் சமுத்திரக்கனியின் தங்கை என்று உதயநிதி ஸ்டாலினுக்கு தெரிய வருகிறது. அதன் பின் இவர்களுடைய காதல் என்னவானது..? உதயநிதி ஸ்டாலினின் சபதம் நிறைவேறியதா...? என்பதே இப்படத்தின் காமெடி கலந்த உணர்ச்சிபூர்வமான மீதி கதை.
போட்டோகிராபராக வரும் உதயநிதி ஸ்டாலின் எதார்த்த நடிப்பில் பின்னியிருக்கிறார். அவர் நடித்த படங்களிலேயே இதில் தான் அவருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது. எந்த ஒரு காட்சியிலும் அலட்டல் இல்லாமல் முகபாவனைகளை மிகவும் அழகாகவும், இயல்பாகவும் வெளிப்படுத்தி நடிப்பில் 'நிமிர்'ந்துள்ளார்.
நமிதா பிரமோத் ஒவ்வொரு பிரேமிலும் தனது முகபாவனைகளை நொடிக்கு நொடி மாற்றி நடிப்பில் கை தட்டல்களை அள்ளுகிறார். படம் முழுவதும் இவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பின் உச்சம். ஒரு இடத்தில் கூட சோர்ந்து போகாதபடியான நடிப்பு. எப்போது கலகலப்பாக இருந்தாலும், அவ்வப்போது வரும் காதல் காட்சியிலும் உணர்ச்சிபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் முன்னால் காதலியாக வரும் பார்வதி நாயர் கொஞ்சநேரம் வந்தாலும் மனதில் பதிகிறார். எம் எஸ் பாஸ்கர், இயக்குனர் மகேந்திரன், சன்முகராஜன், சமுத்திரக்கனி, கருணாகரன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி போன்ற நடிகர்கள் அவரவர் வேலைகளை கன கட்சிதமாக செய்து முடித்துள்ளார்கள். கதையோட்டத்திலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.
பஹத் பாசில் நடித்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' மலையாளப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக நிமிர் படம் உருவாகியுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். என்னதான் ரீமேக்காக இருந்தாலும் மலையாளத்தில் பார்த்தவர்களுக்கும் இந்த படம் புடிக்கும் வகையில் புதுமையான காட்சிகளை இதில் புகுத்தி, ரசிக்கும்படியாகவும் அமைத்துள்ளார். படம் முழுவதும் காமெடியை ரொம்ப போட்டு திணிக்காமல், அதே சமயம் முகம் சுழிக்காமலும் பார்த்து கொண்டுள்ளார். அந்த அளவுக்கு காமெடி காட்சிகள் நமக்கு அளவான சிரிப்பை படம் முழுவதும் அள்ளி தெளித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும், அடுத்த காட்சியை முழுமை பெறாமல் மிகவும் புத்திசாலித்தனமாக நகர்த்தியுள்ளார் இயக்குனர். என்னதான் முழுமை பெறாமல் காட்சிகள் நகர்ந்தாலும் திரைக்கதை பிசிறில்லாமல் செல்வதால் அவையெல்லாம் நமக்கு அழகாக தெரிகிறது. எந்த ஒரு கதாபாத்திரத்தின் தன்மையையும் முழுமையாக முடிக்காததால், அதில் வரும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் நாமும் ஒன்றி போகும் சூழல் இப்படத்தை பார்க்கும்போது நமக்கு ஏற்படுகிற மாதிரி பார்த்து கொண்டுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன். ஒரு கவிதை போல் மிகவும் உயிரோட்டமாக, நமது மனதின் பக்கத்தில் இருக்கும் படமாக கொடுத்ததற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
சமுத்திரக்கனியின் வசனம் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு பார்வதி நாயர் போட்டோவை எடுத்துவிட்டு, நமிதா பிரமோத் போட்டோவை உதயநிதி ஸ்டாலின் தன் ஸ்டுடியோவில் ஓட்டும்போது, உதயநிதி ஸ்டாலினின் அப்பாவாக வரும் மகேந்திரன் 'ஏன் போட்டோவை மாற்றுகிறாய்' என்று கேட்கையில் அதற்கு உதயநிதி ஸ்டாலின் 'இவ்வுளவு நாள் இது தப்பாக இங்கு இருந்தது' என்று சொல்ல அதற்கு மகேந்திரன் 'அது இப்போது தான் தெரிந்ததா' சொல்லும் ஆழமான வசனமே அதற்கு சான்று.
என் கே ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் கண்களுக்கு இதமாக குளிர்ச்சியுடன் காணப்படுகிறது. ஒவ்வொருவரையும் மிக எதார்த்தமாகவும், அழகாகவும் காண்பித்துள்ளார். அஜனீஷ் லோக்நாத் மற்றும் தர்பூகா சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் அழகாக நம் மனதை ஊடுருவி செல்கின்றன. ரிப்பீட் மோடில் பாடல்கள் இல்லையென்றாலும் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் அருமையாக உள்ளதை மறுக்க முடியாது. ரோனி ராபெல்லின் பின்னணி இசை படத்திற்கு உயிர்ரோட்டமாக அமைந்துள்ளது.
'நிமிர்' நம் குடும்பத்துடன் கண்டு கழிக்கக்கூடிய வாழ்வியல் சார்ந்த அழகான கவிதை.