சமூக ஆர்வலர், செயல்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி உண்ணாவிரதம், பேனரைக் கிழித்தார், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார், தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார், பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்... என செய்திகளில் நாம் தினந்தோறும் பார்ப்பதுண்டு. அப்படி நம் செவியில் அவ்வப்போது அடிபட்டுக்கொண்டிருக்கும் இந்த டிராஃபிக் ராமசாமி யார், என்ன செய்தார் என்பதை சொல்ல வருவதாகத்தான் நம்பினோம் இந்த 'டிராஃபிக் ராமசாமி' திரைப்படத்தை. என்ன சொல்லியிருக்கிறது, பார்ப்போம்.
டிராஃபிக் ராமசாமியின் சுயசரிதைப் புத்தகம் வெளியிடும் விழாவுடன் படம் தொடங்குகிறது. அந்தப் புத்தகத்தில் இவருடைய அனுபவங்களை ஒரு சர்ப்ரைஸ் நடிகர் வாசிக்கிறார். டிராஃபிக் ராமசாமியாக நடித்திருக்கும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மனைவி, மகன், மகள், பேத்தி என மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து வருகிறார். அதே சமயம் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்பது, போராட்டத்தில் குதிப்பது, வழக்குத் தொடர்வது என சமூக பிரச்சனைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் சாலையில் பான்பராக் போட்டு எச்சில் துப்பும் நபர் முதல் போலீஸ் ஸ்டேஷனில் தவறான செயலில் ஈடுபடும் பெண் இன்ஸ்பெக்டர் வரை அனைவரையும் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தருகிறார்.
இப்படிப்பட்ட டிராஃபிக் ராமசாமி தொடரும் ஒரு வழக்கில் எம் எல் ஏ, மேயர், அமைச்சர் என அனைவரும் சிக்கிக் கொள்கின்றனர். இதனால் கோபமடைந்த அவர்களால் டிராஃபிக் ராமசாமியின் உயிருக்கு ஆபத்து நேர்கிறது. அதிலிருந்து தப்பித்தாரா, வழக்கு என்ன ஆனது என்பதே ஒரு நிஜ போராளியின் நீளமான பயணத்தை சுருக்கமாக சொல்ல முயன்றிருக்கும் நிழல் 'டிராஃபிக் ராமசாமி'.
டிராஃபிக் ராமசாமி கதாபாத்திரத்திற்கு எஸ்.ஏ.சி கணகட்சிதமாக பொருந்தியுள்ளார். நிஜ டிராஃபிக் ராமசாமி பட்ட கஷ்டங்களை சந்தித்த சவால்களை நம் கண் முன் கொண்டுவர நன்றாகவே முயற்சி செய்துள்ளார். போலீசாரிடம் அடி வாங்குவது, மனைவி, பேத்தி என பாசத்தில் உருகுவது என நடிப்புக்கு நியாயம் செய்கிறார். கமர்ஷியல் அம்சத்திற்காக சேர்க்கப்பட்டுள்ள ஆர்.கே.சுரேஷ் பாத்திரத்தில் அவர் முதலில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக மாறி எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டிராஃபிக் ராமசாமியின் மனைவியாக வரும் ரோகிணி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அனுதாபம் பெறுகிறார்.
இவர்கள் தவிர விஜய்சேதுபதி, குஷ்பு, சீமான், விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், மனோபாலா, பிரகாஷ்ராஜ், அம்பிகா, இமான் அண்ணாச்சி, மோகன்ராமன், மதன்பாப், லிவிங்ஸ்டன் என தங்களால் முடிந்த அத்தனை பேரையும் படத்தில் கொண்டுவந்து இது சற்று சக்தி வாய்ந்த டிராஃபிக் ராமசாமி என்று உணர்த்தியுள்ளார் இயக்குனர் விக்கி. ஆனால், இவர்களால் படத்திற்கு என்ன பலன் என்பது கேள்வியாக மட்டுமே இருக்கிறது. எஸ்.வி.சேகர் நீதிபதியாக நடித்திருப்பது அரசியல் பகடியா, நகை முரணா, யதார்த்தமாக நடந்ததா தெரியவில்லை.
85 வயதிலும் அயராத தொடர்ந்து தமிழக மக்களின் அநீதிகளுக்கு எதிராகப் போராடி வரும் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையில் நடந்த இரண்டு முக்கிய வழக்குகளை இப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் புதுமுக இயக்குனர் விக்கி. ஆனால், காட்சிப்படுத்திய விதம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எத்தனை வன்மையான எதிர்ப்புகள், தாக்குதல்கள், ஆபத்துகள் இருந்திருக்கும்? அவை எதுவுமில்லாமல் கமர்சியல் திரைப்படமாக உருவாக்க முயன்று அந்த வகையிலும் சற்று சறுக்கியிருக்கிறார் இயக்குனர். அதிலும் அனல் பறந்திருக்க வேண்டிய நீதிமன்ற காட்சிகளைக் கூட காமெடி காட்சிகளாக ஆக்கியிருப்பது, குத்துப் பாடல் வைத்தது, அவருக்கு வரும் 'மாஸ்'(?) பின்னணி இசை வைத்தது என பல விஷயங்கள் ஏற்கனவே உடல் வழு குறைந்திருக்கும் நிஜ டிராஃபிக் ராமசாமிக்கு ஏற்பட்டிருக்கும் துயரம் என்றுதான் சொல்ல வேண்டும். இதெல்லாம் சேர்த்தால்தான் மக்கள் பார்ப்பார்கள் என்று இயக்குனர் காரணம் சொன்னால், அவர் ஜோக்கர், மெட்ராஸ், அறம் போன்ற படங்களைப் பார்க்கவேண்டும். தமிழ் சினிமா ரசிகர்கள் மாறி பல காலம் ஆகிவிட்டது விக்கி.
பாலமுரளியின் இசையில் பின்னணி இசையும் (சில இடங்களைத் தவிர்த்து), 'சோர்ந்திடாதே' பாடலும் நலம். குகன் பழனியின் ஒளிப்பதிவில் சென்னையின் பரபரப்பு நன்றாகவே பதிவாகியுள்ளது.
நிகழ்காலத்தில் வாழும் ஒருவருடைய கதையை, நன்கு அறியப்பட்ட அவருடைய பெயருடனே படமாக உருவாக்கும்பொழுது உண்மைக்கு நெருக்கமாக இருந்திருக்கலாம், அல்லது முழுமையாக கற்பனையாக சென்றிருக்கலாம். இரண்டுமல்லாமல் இருப்பது படத்தை சீரியஸாகக் கருதவிடாமல் தடுக்கிறது.
டிராஃபிக் ராமசாமி... நிஜம் குறைவு!