அஜித், விஜய் இருவரில் யாரை அதிகம் கலாய்த்திருக்கிறது தமிழ்ப்படம்2? கடைசியில் பார்ப்போம்.
கடந்த 2010ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் வெளியான ஒரு டிரைலர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சில நிமிடங்களே ஓடக்கூடிய அந்த டிரைலரில் எம்.ஜி.ஆர், சிவாஜியில் ஆரம்பித்து சிம்பு, தனுஷ் வரை அனைவரது படங்களையும் கலாய்த்துத் தள்ளி ரசிக்க வைத்த அந்த டிரைலர் 'தமிழ்ப்படம்' என்ற படத்தின் டிரைலர். அதுவரை சில படங்களில் ஓரிரு காட்சிகள் ஸ்பூஃபாக வந்திருந்தாலும் ஒரு முழு நீள படமாக 'ஸ்பூஃப்' என்ற வகையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது, வெற்றியும் பெற்றது. அனைத்து படங்களையும் கலாய்த்து ரசிகர்களை மகிழ்வித்த தமிழ்ப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் முன்பே விளம்பரங்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி புகழ் பெற்ற நடிகர்களுக்கிணையான ஓப்பனிங்குடன் வந்திருக்கும் இயக்குனர் சி.எஸ்.அமுதனின் 'தமிழ்ப்படம் 2' - போலீஸ் அத்தியாயம் அனைவரையும் மீண்டும் மகிழ்வித்ததா?
முதல் பாகத்தில் 'டி' என்ற வில்லனாக வரும் தன் பாட்டியை கைது செய்ய வேண்டிய நிலை வரும்போது சிவா தன் போலீஸ் வேலையை ராஜினாமா செய்வது போல் படம் முடியும். அதன் பிறகு சிவா சாதாரண வேலை செய்து வருகிறார். இதற்கிடையே மதுரையில் நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்த சிவாவால்தான் முடியும் என காவல்துறை அவரை நாடுகிறது. சிவாவும் கலவரக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே பிரச்சனையை தீர்க்கிறார். இதைப்பார்த்த காவல்துறை அவரை மீண்டும் பணிக்கு அழைக்கிறது. அதற்கு சிவா மறுக்கும் நேரம் பார்த்து அவர் மனைவியை பாம் வைத்து கொன்றுவிடுகிறார் வில்லன் 'பி'. இதனால் கோபமடைந்த சிவா மீண்டும் போலீசில் சேர்ந்து 'பி' யை பழிவாங்க செய்யும் முயற்சியில் வெற்றிபெற்றாரா இல்லையா என்பதே இந்தத் தமிழ்ப்படம்.
கதை என்பது பெயருக்குத்தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. காட்சிகள்தான் இதில் முக்கியம், நமக்கு நன்கு தெரிந்த, சூப்பர்ஹிட் படங்களின் காட்சிகளை, நம் ஆதர்ச நாயகர்கள் போலவே நடித்து, கலாய்த்து கைதட்டல் பெற முயற்சி செய்து கிட்டத்தட்ட வென்றிருக்கிறார்கள். பழைய காட்சிகளைக் கோர்த்து இந்தக் கதைக்கேற்றவாறு உருவாக்கும் வேலையை நன்றாகவே செய்திருக்கிறார் சி.எஸ்.அமுதன். ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஷால், சிம்பு என நீண்டுகொண்டே செல்லும் கலாய் பட்டியல், தமிழைத் தாண்டி டெர்மினேட்டர், ஃபாரஸ்ட் கம்ப் என ஆங்கிலப் படங்களுக்கு சென்று கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆங்கில வெப் சிரீஸ் வரை வெறித்தனமாக சென்றிருக்கிறது.
இடையில் அரசியலையும் சேர்த்திருப்பது இரண்டாம் பாகத்தில் எக்ஸ்ட்ரா காம்ப்ளிமென்ட். ஓ.பன்னீர்செல்வத்தின் தியானம், ஹெச்.ராஜாவின் பேச்சு, சசிகலா பதவியேற்பு என அரசியல் பக்கமும் தைரியமாக விளையாடியிருப்பதைக் கண்டிப்பாக பாராட்டலாம். பிரதமர் மோடிவரை சென்றிருக்கிறார்கள். ஆனால், விளம்பரங்களில் வந்த பதினைந்து லட்சம்-ஜி.எஸ்.டி காட்சியைப் படத்தில் காணவில்லை. இத்தனையையும் தடை போடாமல் அனுமதித்த, வெளியே சொல்லி பிரச்சனைகளைக் கிளப்பாத சென்சார் குழுவையும் பாராட்ட வேண்டும். காட்சிகளின் பின்னணியில் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும், விஷயத்திலும் நம்மை சிரிக்கவைக்க ஏதோ ஒன்று இருப்பது சிறப்பு. மாஸ் ஹீரோக்களை கலாய்ப்பதோடு, பட ரிலீஸ் அன்றே சக்ஸஸ் மீட் வைப்பது, பெண்களைத் திட்டிப் பாடுவது போன்ற சினிமா வழக்கங்களையும் கிண்டல் செய்திருக்கிறார் அமுதன்.
'அகில உலக சூப்பர் ஸ்டார்' என அறிமுகம் செய்யப்படும் சிவா முதல் பாகத்தை போலவே இப்படத்திலும் கலக்கியிருக்கிறார். ரஜினி முதல் விஷால் வரை அவர் கலாய்க்க எடுக்கும் ஒவ்வொரு அவதாரங்களும் சிரிப்பை உண்டாக்கத் தவறவில்லை. சிவாவின் கரியரில் இது ஒரு முக்கியமான படம். அவருக்கு நடிக்கத் தெரியாது என்று படத்திலேயே கூறுகிறார். அதுதான் இந்தப் படத்திற்கு தேவையுமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் அந்த நடனப் போட்டியில் அரங்கம் உண்மையிலேயே சிரிப்பில் அதிர்கிறது. ஐஸ்வர்யா மேனன் பார்ப்பதற்கு அழகு. படத்தில் அவருக்கு பல நாயகிகள் போலவே வந்து செல்லும் வேலை. அந்த வேலையை சரியாக செய்துள்ளார். காதல் தோல்வியில் மது அருந்திவிட்டு நண்பர்களோடு ஆடுவது ROFL.
வில்லன் 'பி' யாக வரும் சதிஷின் கெட்டப்புகள் நம்மை சிரிக்க வைத்தாலும் அவர் நம்மை சிரிக்கவைக்கவில்லை. சிவாவின் முன் அவர் தொய்வாகவே இருக்கிறார். அந்த நடனப் போட்டியில் மட்டும் அவரது பெர்ஃபார்மன்ஸ் நச். இவர்களுக்கு அடுத்து நம்மை கவனிக்கவைப்பது சேத்தன். சீரியஸ் நகைச்சுவையை சிறப்பாக செய்திருக்கிறார். இந்த முறை நண்பர்களாக வரும் மனோபாலா, சந்தான பாரதி, ஆர்.சுந்தர் ராஜன் மூவரில் சந்தான பாரதி மட்டும் ஓரிரு இடங்களில் சிரிக்கவைக்கிறார். மற்றவர்களுக்கு படத்தில் பெரிய வேலை இல்லை. இவர்கள் போக கலைராணி, திஷா பாண்டே, நிழல்கள் ரவி, ஓ.ஏ.கே.சுந்தர் என பலரும் இருக்கிறார்கள்.
படத்தில் சில விஷயங்களை வைத்தே ஆக வேண்டும் என்று வைத்து படத்தின் நீளம் அதிகமாகியிருக்கிறது. இரண்டாம் பாதி தொய்வடைந்து நீளத்தை உணர வைக்கிறது. சிவா என்டர்டைன் செய்யும் அளவுக்கு வில்லன் சதீஷின் பாத்திரம் செய்யவில்லை. தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய பல காட்சிகள் இருப்பது ஒரு சவால். சாதாரண சினிமா ரசிகருக்கு பல காட்சிகள் புரியாமல் இருக்க வாய்ப்பு அதிகம். புகழ் பெற்ற காட்சிகளை பிரதிபலிக்கும்போது அந்தக் காட்சிகளின் தாக்கத்தில்தான் சிரிப்பு வருகிறது. இவர்களின் க்ரியேட்டிவிட்டி காமெடியிலும் குறையாகவே இருக்கிறது. கஸ்தூரி ஆடும் அந்த நடனம் சற்று அயர்ச்சி.
கண்ணனின் பின்னணி இசை பாராட்டப்பட வேண்டியது. பிரபலமான இசையை அப்படியே போடாமல் அதைப் போலவே, அதுவும் ரசிக்கும்படி அமைத்ததற்கு லைக்ஸ். பாடல்களும் கலாய்க்கவேண்டுமென்ற நோக்கத்திற்காக போடப்பட்டதால் அந்த வேலையை மட்டும் செய்திருக்கின்றன. பெரிய கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் படத்தை தரமானதாகக் காட்டியிருக்கிறது. ஸ்பூஃப் படமென்பதால் அதை வைத்து மட்டுமே ஓட்டிவிடலாம் என்ற எண்ணம் இல்லாமல், மேக்கிங் தரமாக செய்திருப்பது சிறப்பு.
தமிழ்ப்படம் 2 - இதுதான் இருக்கும் என்று தெரிந்து செல்லும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்ஜாய்மென்ட், எப்போதாவது படம் பார்ப்பவர்களுக்கு எக்ஸாமினேஷன்.
அஜித்தா விஜயா... இருவரில் இந்த முறை அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது அஜித்தான்.