ஒரு மனநல காப்பகம் தீப்பற்றி எரிந்து அதில் இருந்த மன நோயாளிகள் அனைவரும் இறப்பது போல் படம் ஆரம்பிக்கின்றது. இந்த தீ விபத்துக்கு அமைச்சர் தலைவாசல் விஜய் தான் காரணம் என அனைவரும் குற்றம் சாட்ட அவர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறார். அவருடைய உதவியாளரும் பத்திரிகையாளருமான அஸ்கர் அலியிடம் இது தொடர்பாக இருக்கும் வீடியோ ஆதாரத்தை கைப்பற்ற முயற்சி செய்து வில்லன் கும்பல் தலைவாசல் விஜயையும் பத்திரிகையாளர் அஸ்கர் அலியையும் கொன்று விடுகின்றனர். இன்னொரு பக்கம் சினிமாவில் பெரிய நடிகராக ஆசைப்படும் நகுல் ஊரை ஏமாற்றி பணம் சம்பாதித்துக்கொண்டு வெட்டித்தனமாக ஊரை சுற்றி வருகிறார். இவரை சினிமாவில் இயக்குனராக ஆசைப்படும் நாயகி ஆஞ்சல் முஞ்சால் பின்தொடர்ந்து நகுலின் கதையை படமாக எடுக்க ஆசைப்படுகிறார். இதனை அறிந்த நகுல் நாயகியை காதலிக்கிறார். நாயகி ஒரு கண்டிஷன் போட, நகுல் என்ன செய்தார்... மனநல காப்பக தீ விபத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதே 'செய்' படத்தின் கதை.
நாயகன் நகுல் மிகவும் துருதுருவென்று நடித்துள்ளார். ஆரம்பத்தில் அது ரசிக்கும்படி இருந்தாலும் பிற்பகுதியில் சற்று எரிச்சலூட்டும்படியாக உள்ளது. இருந்தும் பல காட்சிகளில் அவருடைய டைமிங் சென்ஸ் மிகவும் அருமையாக உள்ளது. நகைச்சுவை காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். நகுல் கதைத் தேர்வில் கொஞ்சம் கவனமாக இருந்தால் வெற்றி வாய்ப்புகள் எளிதாகும். நாயகி ஆஞ்சல் முஞ்சால் நாயகன் நகுலை தூரத்திலிருந்தே காதலிக்கிறார், டூயட் பாடுகிறார். மற்றபடி அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வேலை இல்லை. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நாசர், தலைவாசல் விஜய், பிரகாஷ்ராஜ், அஸ்கர் அலி போன்றவர்கள் அவரவர் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
ஏர்வாடி தீ விபத்தை ஞாபகப்படுத்தும்படியாக ஒரு மனநல காப்பக தீ விபத்தில் படத்தை ஆரம்பித்து பின் சினிமா, காதல், டூயட் என கமர்ஷியல் பார்முலாவில் கதையை நகர்த்தி பின் திரில்லர் வகை ஜானரில் படத்தை முடித்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ராஜ் பாபு. ஆரம்பத்தில் தொய்வில்லாமல் ஆரம்பிக்கும் கதையோட்டத்தைக் கொடுத்து எதிர்பார்ப்பை எகிறச் செய்த இயக்குனர் பிற்பகுதியில் படத்தை வெவ்வேறு திசையை நோக்கி பயணிக்கச் செய்து அயர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். என்னதான் கதையோட்டம் அவ்வப்போது சுவாரசியமாக இருப்பது போல் தோன்றினாலும் காட்சிகளில் அழுத்தம் குறைவாக இருப்பது ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும் நாசர், பிரகாஷ்ராஜ், போன்ற ஜாம்பவான்களை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு காட்சிகளை வேகமாகக் காட்ட உதவியுள்ளது. நிக்ஸ் லோபஸின் பின்னணி இசை நன்று.
செய்... நல்ல மேசேஜ் இருக்கிறது, ஆனால் அது போதுமா? என்றாலும் பார்த்ததற்காக வருத்தப்பட வைக்காத படம்தான்.