Skip to main content

இந்த முறை யாருக்காக? - ‘பிச்சைக்காரன் 2’ விமர்சனம்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

Pichaikkaran 2 Movie review

 

மரணத்தின் படுக்கையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன் தாயை காப்பாற்ற பணக்காரனாக இருக்கும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக நடிப்பதை மையமாகக் கொண்டு உருவான பிச்சைக்காரன் முதல் பாகம் படம் மிகுந்த வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. அதேபோல் தற்பொழுது பிச்சைக்காரனாக இருக்கும் விஜய் ஆண்டனி காணாமல் போன தன் தங்கைக்காக பணக்காரனாக நடித்து வெளியாகி இருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் அதே வரவேற்பைப் பெற்றுள்ளதா இல்லையா?

 

இந்தியாவின் ஏழாவது பணக்காரராக இருக்கும் விஜய் ஆண்டனியின் சொத்துக்களை கொள்ளையடிக்க நினைக்கும் இவரது நண்பர்களான ஜான் விஜய், தேவ் கில், ஹரிஷ் பேரோடி விஜய் ஆண்டனியை கொலை செய்துவிட்டு அவரது மூளையை அகற்றி விட்டு பிச்சைக்காரனாக இருக்கும் இன்னொரு விஜய் ஆண்டனியின் மூளையை பணக்கார விஜய் ஆண்டனியின் தலைக்குள் வைத்து அறுவை சிகிச்சை செய்து விடுகின்றனர். இப்போது பிச்சைக்கார மூளை வைத்திருக்கும் பணக்கார விஜய் ஆண்டனி தாங்கள் சொல்லுகின்ற பேச்சை கேட்டு அவரது சொத்துக்களை தங்களுக்கே கொடுத்து விடுவார் என்று எண்ணிய நேரத்தில் அவர் ஒரு பிச்சைக்காரன் மட்டுமில்லை அவர் ஒரு கொலைகாரன் என்ற உண்மையும் இவர்களுக்குத் தெரிய வருகிறது. இதை அடுத்து அதிர்ச்சி அடையும் கொலைகார நண்பர்கள் சுதாரிப்பதற்குள் பிச்சைக்கார விஜய் ஆண்டனி இவர்களைப் போட்டுத் தள்ளி விடுகிறார். இதையடுத்து பணக்காரராகவே மாறும் பிச்சைக்கார விஜய் ஆண்டனி அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி முடிவுகள் என்ன? காணாமல் போன தன் தங்கையை கண்டுபிடித்தாரா இல்லையா? என்பதே  பிச்சைக்காரன் 2 படத்தின் மீதி கதை.

 

முதலில் இது ஒரு நம்ப முடியாத கதை என்றாலும் இது ஒரு வித்தியாசமான முயற்சி. அந்த வித்தியாசமான முயற்சிக்காகவே இந்த படத்தை காணலாம். அந்த அளவு முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பும், செண்டிமெண்ட் நிறைந்த அழுத்தமான காட்சி அமைப்புகளும் இந்தப் படத்திலும் அமைந்து அந்த வித்தியாசமான முயற்சியையும் சேர்த்து நம்மை ரசிக்க வைத்துள்ளது. முதல் பாதி முழுவதும் விஜய் ஆண்டனியின் ஃபிளாஷ்பேக் மற்றும் உருக வைக்கும் சென்டிமென்ட் காட்சிகள் பின் இடைவேளையில் நடக்கும் அதிரடி ட்விஸ்ட் என வேகமாகவும் அதேசமயம் உருக்கமாகவும் நகர்கிறது. பின் இரண்டாம் பாதி படம் விஜய் ஆண்டனி எடுக்கும் அதிரடி முடிவுகள் அதன்பின் வரும் கிளை கதைகள், எதிரிகளின் சதிகளை முறியடிக்கும் படியான திரைக்கதை என படம் சில வேகத்தடைகளுடன் நகர்ந்து இறுதியில் உருக வைக்கும் காட்சியோடு முடிவடைந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

 

பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தில் அம்மா சென்டிமென்ட் காதல் காட்சி சமூக கருத்துள்ள காட்சி என படம் வேகமாகவும் உருக்கமாகவும் நகர்ந்து நம்மை ரசிக்க வைத்திருக்கும். அதேபோல் பாடல் காட்சிகளும் ஆக்சன் காட்சிகளும் சிறப்பாக அமைந்திருக்கும். இந்தப் படத்திலும் அதே போல் சென்டிமென்ட் காட்சிகளும் ஆக்சன் காட்சிகளும் மட்டும் சிறப்பாக அமைந்து மற்ற இரண்டு சமூக கருத்து மற்றும் பாடல் காட்சிகள் சற்றே ஆவரேஜாக அமைந்துள்ளது. அது படத்திற்கு சில இடங்களில் வேகத்தடையாகவும், அயற்சி ஏற்படும்படியும் அமைந்திருந்தாலும் சென்டிமென்ட் காட்சிகளும், அதிரடி சண்டை காட்சிகளும், அதற்கேற்றவாறான சிறப்பான திரைக்கதையும் நன்றாக அமைந்து படத்தை கரை சேர்த்திருக்கிறது. இவ்வளவு நாள் ஒரு இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வரவேற்பைப் பெற்று வந்த விஜய் ஆண்டனி இப்படத்தின் மூலம் தேர்ந்த எடிட்டர் மற்றும் இயக்குநராகவும் மாறி இருக்கிறார். 

 

நாயகன் விஜய் ஆண்டனி எப்போதும் போல் வழக்கமான நடிப்பை இப்படத்திலும் வெளிப்படுத்தி அதையும் நிறைவாகச் செய்திருக்கிறார். இதில் நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், எடிட்டராகவும் இருந்து படத்தை தனி ஒரு மனிதனாக தூண் போல் தாங்கி நின்று எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். படத்தில் நிறைய கிரீன் மேட் காட்சிகள் வருவதை மட்டும் சில இடங்களில் தவிர்த்து இருக்கலாம். நாயகி காவியா தப்பார் வழக்கமான நாயகியாக வந்து சென்று இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் நண்பர்களாக வரும் ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ்கில் ஆகியோர் அவரவருக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் வில்லனாக நடித்திருக்கும் ராதாரவி முக்கிய வேடத்தில் வரும் ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் அனுபவ நடிப்பின் மூலம் மிளிர்கின்றனர். வழக்கமாக பல படங்களில் வருவது போல் இந்தப் படத்திலும் யோகி பாபு இருக்கிறார். சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். சில காட்சிகளிலேயே வந்தாலும் மனதில் பதிகிறார் மன்சூர் அலிகான். இன்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.

 

ஓம் நாராயணனின் ஒளிப்பதிவில் படம் தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு இவரது ஒளிப்பதிவு எடுத்துச் சென்று இருக்கிறது. அதுவே படத்தின் பலமாகவும் மாறி இருக்கிறது. பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. குறிப்பாக பிச்சைக்காரன் முதல் பாகத்தில் இருந்த அதே பின்னணி இசை பாடலையும் இப்படத்திலும் ஆங்காங்கே ஒலிக்கச் செய்து கூஸ்பம்ப் வர செய்திருக்கிறார். எடிட்டர் விஜய் ஆண்டனி தன் கத்திரிகளை இன்னும் கூட பயன்படுத்தி படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

 

நாம் இதுவரை தமிழ் சினிமாவில் எவ்வளவோ ஆள் மாறாட்ட கதைகளை பார்த்திருப்போம். அந்த வகையில் இதுவும் ஒரு ஆள் மாறாட்ட கதை. ஆனால், அப்படங்களில் இருந்து இப்படம் எந்த வகையில் வேறுபட்டு இருக்கிறது என்ற விஷயத்திற்காகவும், பிச்சைக்காரன் முதல் பாகம் அழுத்தமான சென்டிமென்ட் காட்சிகளால் நம்மை கவர்ந்தது போல் இந்த படத்திலும் அதே போன்ற அழுத்தமான சென்டிமென்ட் காட்சிகள் அமைந்து நம்மை உருக வைத்ததற்காகவும் பிச்சைக்காரன் 2 வை சென்று பார்க்கலாம். 

 

பிச்சைக்காரன் 2 - மிகையானவன்!

 

 

சார்ந்த செய்திகள்