Skip to main content

சாதியை எதிர்க்கும் படைவீரன்!

Published on 12/02/2018 | Edited on 12/02/2018
padaiveeran


ஆதி காலம் தொட்டு ஊரில் நடக்கும் ஒவ்வொரு ஜாதி கலவரத்தின் பின்னணியையும் அலசிப்பார்த்தால் அதற்கு பல காரணங்கள் தென்படும். அதனுடைய வக்கிரமும், வெறியும் எந்த அளவிற்கு ஆழமாக மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது என பல கதைகளிலும், படங்களிலும் நாம் ஆண்டாண்டுகளாக பார்த்து வரும் பழமையான சமூக பிரச்சனையை கையாண்டிருக்கிறான் இந்த படைவீரன்.... 
 

ஒரு கிராமத்தில் விஜய் யேசுதாசின் பெரியப்பாவாக வரும் கவிதா பாரதி, அவர்களது ஜாதி தலைவராக பாவிக்கப்பட்டு, அவர் சொல்படி அனைவரும் கலவரத்திலும், கவுரவ கொலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதே கிராமத்தில் வேலை வெட்டி இல்லாமல், தன் நண்பர்களுடன் ஊர் சுற்றி வம்பிழுத்து அடிதடியில் ஈடுபட்டு சுற்றி திரியும் விஜய் யேசுதாஸ், தன் மாமன் மகள் அம்ரிதாவை பெண் பார்க்க வருபவர்களை கிண்டல் செய்து அவரது திருமணத்தை நிறுத்தியும் வருகிறார். இதனால் கோபமடைந்த அமிர்தா விஜய் யேசுதாசை காதலிப்பதுபோல் நடிக்கிறார். இதை நம்பிய விஜய் யேசுதாஸ் அவளுக்காக திருந்தி போலீசில் சேர முடிவெடுக்கிறான். அதற்காக பாரதிராஜாவிடம் உதவியுடன் லஞ்சம் கொடுத்து போலீஸ் வேலையில் சேருகிறான். பின்பு அம்ரிதா அவனை ஏமாற்றிய விஷயம் விஜய் யேசுதாசுக்கு தெரியவருகிறது. இதனால் அவன் மணமுடைகிறான். சிறுது நாட்களில் போலீஸ் டிரெயினிங் முடிந்த பின்னர் அவருடைய ஊரில் ஜாதிக்கலவரம் நடப்பதாகவும், அந்த கலவரத்தை கட்டுப்படுத்த விஜய் யேசுதாஸ் டீம் போக வேண்டும் என்றும் ஆர்டர் கொடுக்கப்படுகிறது. ஜாதிக்கலவரத்தை தடுக்க சொந்தபந்தங்களையே அடிக்கவும், கைது செய்ய வேண்டிய நிலை வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை விஜய் யேசுதாஸ் எப்படி சமாளித்தார்..? அமிர்தாவுடனான காதலில் ஜெயித்தாரா...? என்பதே மீதி கதை.
 

padaiveeran


கதாநாயகன் விஜய் யேசுதாஸ் நடிப்பில் தேறிவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் லுங்கியும், இரண்டாவது பாதியில் மிடுக்கான போலீசாகவும் வந்து அந்தந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். எந்த விஷயமும் அறியாத, அப்பாவியான அவரது நடிப்பும், பின்பு கலவரத்தில் மாட்டிக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிக்கும் இடத்திலும் இயல்பான பாவனைகளை வெளிக்காட்டியுளார். 
 

கதாநாயகி அமிர்தா வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பு. துடுக்கான பெண்ணாக வரும் அவரின் பாவனைகள் அழகாக வெளிப்பட்டிருக்கின்றன. 
 

இயக்குனர் பாரதிராஜா அவருக்கே உரித்தான நடிப்பில் பின்னியிருக்கிறார். எக்ஸ் சர்வீஸ்மேனாக வரும் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் இன்றைய நாட்டின் நிலையை தோலிரித்து காட்டுவதாக அமைந்துள்ளது. இவருடைய அழுத்தமான வசனங்கள் மூலம் அந்த கிராமத்தை திருத்த எடுக்கும் முயற்சிகளை கலகலப்பாக கையாண்டிருக்கிறார். இதுவே படத்தின் மிக பெரிய பலமாக அமைந்துள்ளது. 

 

padaiveeran


விஜய் யேசுதாஸ் நண்பர்களாக வரும் நான்கு பேரும் படத்தை தூக்கி நிறுத்தியுள்ளனர். மேலும் காமெடியிலும் கலக்கியுள்ளார்கள். 
 

இயக்குனர் தனாவின் திரைக்கதையில் முதல் பாதி கலகலப்பாகவும், வேகமாகவும் நகருகிறது. இரண்டாம் பாதி சற்று அயற்சியுடன் உணர்ச்சிகரமாக உள்ளது. கவுரவ கொலைகளின் வீரியத்தையும், ஜாதி வெறியையும் மிக யதார்த்தமாக காட்டியுள்ளார். இரண்டாம் பாதியை இன்னும் சுவாரஸ்யமாக சொல்லியிருந்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சி நெஞ்சை உருக வைக்கிறது. 
 

நீண்ட நாட்களுக்கு பிறகு இசையமைத்த கார்த்திக் ராஜாவின் இசையில் தனுஷ் பாடிய 'லோக்கல் சரக்கா ஃபாரின் சரக்கா' என்ற பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. ராஜவேல் மோகனின் கேமிரா கிராமத்தையும், அதன் அழகையும் மிக யதார்தமாக படம் பிடித்துள்ளது.
 

படைவீரன் ஒரு பரிதாபமான வீரன்
 

சார்ந்த செய்திகள்