Skip to main content

'கோலமாவு'க்கு இப்படியொரு அர்த்தம் இருக்கா...? - கோலமாவு கோகிலா விமர்சனம்  

Published on 18/08/2018 | Edited on 20/08/2018

பாலசந்தர் பாணி கதையில் கொஞ்சம் திரில்லிங்கான கோலமாவை (கொக்கைன்) கலந்து கொடுத்துள்ள படம்... நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் நயன்தாராவின் தந்தை சிவாஜி ஏடிஎம் காவலாளி, தாய் சரண்யா பொன்வண்ணன் கேன்சர் நோயாளி, தங்கை ஜாக்குலின் கல்லூரி மாணவி. வறுமையில் வாடும் இந்தக் குடும்பத்தை நயன்தாரா மட்டுமே வேலைக்கு சென்று காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் வேலைக்குச் செல்லும் இடமெல்லாம் நயன்தாராவிற்கு பலரும் பல வகையிலும் தொல்லை கொடுக்க, மனம் வெறுத்த நயன்தாரா வேறு வழியின்றி அம்மாவின் வைத்திய செலவுக்காக கொக்கைன் கடத்தல் கும்பலில் சேர்ந்து கடத்தலில் இறங்குகிறார். பின்னர் அதிலிருந்து அவர் சம்பாதித்தது பணமா பகையா, அதனால் அவருக்கு ஏற்பட்டது நன்மையா பிரச்சனையா  என்பதே 'கோலமாவு கோகிலா'.


 

nayanthara



நயன்தாரா சீரியஸான ரோல் மட்டுமல்ல, எந்த பாத்திரத்திலும் தன்னால் நன்றாக நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார். 'அறம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகியாக நடித்த படம் என்பதால் ஏற்பட்ட எதிர்பார்ப்பை நன்றாக பூர்த்தி செய்துள்ளார். அப்பாவியான முகபாவனை வைத்துக்கொண்டு போதை பொருள் கடத்துவது, பின்னர் எதிரிகளை போட்டுத்தள்ளுவது என தனி மனுஷியாக தன் நடிப்பால்   படத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளார்.

 

 


படத்தின் இன்னொரு நாயகன் யோகி பாபு, படத்தைத் தூக்கி நிறுத்த நயன்தாராவிற்கு நன்றாக தோள் கொடுத்துள்ளார். படம் முழுவதும் இவரது காமெடி கூட்டணியான அன்புதாசன் மற்றும் ஆனந்துடன் அடிக்கும் லூட்டி தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்தி அரங்கத்தை அதிரச்செய்துள்ளது. மேலும் வில்லன் கேங்கில் வரும் டானி கதாபாத்திரமான ரெடின் யோகிபாபு இல்லாத இடத்தில் ஸ்கோர் செய்து காமெடியில் அதகளப்படுத்தியுள்ளார். சீரியஸான நடிப்பில் ஆரம்பித்து பின் காமெடி கலந்த நடிப்பில் வழக்கம்போல் பின்னியிருக்கிறார் சரண்யா பொன்வண்ணன். ஜாக்குலின், மொட்டை ராஜேந்திரன், போலீஸ் சரவணன் மற்றும் வில்லன்கள் என அனைவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

  yogibabu



பெரிய கதாநாயகர்கள் நடிக்கத் தகுந்த இந்தப் படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்த தைரியத்திற்கே இயக்குனர் நெல்சனை பாராட்டவேண்டும். படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லை. குத்துப் பாடல்கள் இல்லை. மாஸான பன்ச்க்கள் இல்லை. இருந்தும் நயன்தாராவை மட்டுமே வைத்து மக்களுக்கு என்ன கொடுத்தால் ஏற்பார்களோ அதை ஓரளவு கன கச்சிதமாக கொடுத்து ரசிக்க வைத்துள்ளார். நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார்தான், அதற்காக லாஜிக்குகளில் இத்தனை ஓட்டையை அனுமதிக்கலாமா? 

 

family



படத்தின் பெரிய ஹீரோ அனிருத்தான். ஏற்கனவே வெளியான 'கல்யாண வயசு' பாடல் சூப்பர் ஹிட். மேலும் படத்திற்கு போட்ட பின்னணி இசை செம இளமையாக உள்ளது. இசையில் புதுப் புது நுட்பங்களை பயன்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். சிவக்குமார் விஜயனின் கேமரா படத்தை அழகாகவும், திரில்லிங்காகவும் காட்டியுள்ளது. இத்தனையும் சிறப்பாக இருந்தும் நயன்தாரா குடும்பத்தின் பணத்தேவையை நம் மனதில் பதியச் செய்ய தவறிய திரைக்கதையும், இத்தகைய பெரிய ஒரு குற்றத்தை, நெட்வொர்க்கை ஏதோ ஒரு சிறிய பிக்பாக்கெட் குழு போல காண்பித்ததும் படத்தின் சீரியஸ்னஸ்ஸை உணருவதிலிருந்து நம்மை தடுக்கிறது.

 

 


'கோலமாவு கோகிலாவை' நயன்தாரா, யோகி பாபு இவருக்காகவே பார்க்கலாம். கோலமாவு என்ற பெயரில் இந்த ஆபத்து உலவிக்கொண்டிருப்பது இப்போது தெரிந்திருக்கிறது. இன்னும் பல பெயர்களில் மாணவர்களைக் கெடுக்கும் பல ஆபத்துகள் நடக்கின்றன என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறது 'கோகோ'.   

 

 

 

சார்ந்த செய்திகள்