Skip to main content

ரஜினிக்கு காலா, கமலுக்கு விஸ்வரூபம்... என்ன லிங்க் தெரியுமா?   

Published on 11/08/2018 | Edited on 11/08/2018

 

விஸ்வரூபம் 2 - விமர்சனம்

உமர் (ராகுல்போஸ்) திட்டப்படி அமெரிக்காவில் குண்டு வெடிப்பு நிகழ்த்தும் திட்டத்தை உளவுத்துறை அதிகாரியான விசாம் (கமல்ஹாசன்) தன் குழுவோடு முறியடிப்பதும், அதிலிருந்து ராகுல் போஸ் தப்பித்து செல்லும்போது... 'ஒன்னு உமர் சாகணும்.. இல்ல நா சாகணும்... அதுவரை இந்த கத தொடரும்...' என்று கமல் சொல்வது போல் 'விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் முடிந்தது. தற்போது இதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள விஸ்வரூபம் 2ல் கமல் சொன்னதுபோல் கதை தொடர்ந்ததா? அல்லது முடிந்ததா...? முதல் பாகத்தில் விஸ்வரூபம் எடுத்த கமலின் வேர் என்ன, வந்த வழி என்ன என்பதை விளக்குகிறது விஸ்வரூபம்2.

 

kamal



இந்திய ராணுவத்தில் கைதேர்ந்த முக்கிய அதிகாரியாக இருக்கும் கமல்ஹாசன் அனைவருக்கும் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் உள்ளார். கமலிடம் பயிற்சி பெரும் ராணுவ அதிகாரியாக வரும் ஆண்ட்ரியாவும் கமலும், ஒரு நாள் இராணுவ பகுதியை விட்டு வெளியே சென்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பின் இருவருக்கும் பொறுப்புகள் பறிக்கப்படுகின்றன. வெளிஉலகத்துக்குதான் இந்த நடவடிக்கை, ராணுவ ரீதியாக இவர்கள் ரகசிய உளவு அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படும் கமல் அல்கொய்தாவில் இணைந்து  பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கச் செல்கிறார். இவரது துரோகம் அறிந்த உமர் மற்றும் அவரது குழுவினர் என்ன செய்தார்கள், அவர்களது அடுத்தகட்ட தீவிரவாத நடவடிக்கைகளை முறியடித்தாரா கமல் என்பதை விஸ்வரூபமாக இல்லாமல் சற்று அமைதி சொரூபமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கமல்ஹாசன்.

 

 


கமல்ஹாசன் வழக்கம் போல் தன் பக்குவமான நடிப்பால் படத்தை மிளிரவைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் சின்னச் சின்ன உணர்வு வெளிபாடுகளிலும் கவனித்து ரசிக்க ஆயிரம் விஷயங்களை வைத்துள்ளார். ஆண்ட்ரியா, பூஜாகுமார் இருவருக்கும் கதையிலும் போட்டி, கதாபாத்திரங்களாகவும் போட்டியே. ஆண்ட்ரியா ஆக்ஷனிலும் பூஜா அழகிலும் ஜொலிக்கிறார்கள். முதல் பாகத்தில் கொடூர வில்லனாக அறிமுகமான ராகுல் போஸ் இந்தப் பாகத்தில் கொஞ்ச நேரமே  வந்தாலும் மீண்டும் மிரட்டியுள்ளார். மற்றபடி சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன், வஹீதா ரஹ்மான் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவரவருக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

  kamalhassan viswa



கமல்ஹாசன் வழக்கம் போல் ரசிகர்களுக்கு அதிக கவனம் தேவைப்படும் காட்சிகள் மூலம் திரைக்கதை அமைத்துள்ளார். அது எப்போதும் போல் பல இடங்களில் ரசிக்கும்படியாகவும் உள்ளது. நடுநடுவே அரசியல் வசனங்களும், குறியீடுகளும் ஒளிந்திருக்கின்றன. முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால் அதிலிருக்கும் பல காட்சிகள் இதிலும் இருக்கின்றன. சில காட்சிகள் தேவையென்றாலும் சற்று அதிகமாகவே சேர்க்கப்பட்டிருக்கின்றன. விஸ்வரூபம் படத்தில் மெய்சிலிர்த்து  கைதட்ட வைத்த பல காட்சிகள் இருந்தன. இதில் அவை மிஸ்ஸிங். காட்சிகளின் கன்டினியூட்டியை (தொடர்ச்சியை) நுணுக்கமாக கடைபிடித்து அசத்தியுள்ளார் கமல். ஸ்பை த்ரில்லரில் தாய் பாசம் வரை சேர்த்திருப்பது சரிதான். ஆனால், ஆக்ஷன் குறைவாக இருப்பது குறையாக இருக்கிறது.

 

andrea



ஜிப்ரானின் பாடல்களும், பின்னணி இசையும் சற்று ஏமாற்றமே.  பின்னணி இசை இன்னும் வீரியத்துடன் இருந்திருக்கலாம்.  சனு ஜான் வர்கீஸ், சம்தத் சய்னதீன் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. மகேஷ் நாராயணன், விஜய் ஷங்கர் படத்தொகுப்பு படத்தின் வேகத்திற்கு உதவியுள்ளது. கமல்ஹாசன் படங்களில் தொழில்நுட்ப விஷயங்கள் முதல் தரமாக இருக்கும். ஆனால், இதில் க்ரீன் மேட் காட்சிகளை சாதாரண ரசிகர்களே கவனித்து சொல்லும் அளவுக்கு குறை வைத்தது ஏனோ?

 

 


படத்தின் தொடக்கத்தில் மக்கள் நீதி மய்யம் காணொளி வருகிறது. மக்களிடம் பேச நல்ல வழிதான். படத்திலும் பல அரசியல் வசனங்கள் இருக்கின்றன. ரஜினிக்கு காலா போல, கமலுக்கு விஸ்வரூபம்2. இரண்டுமே அவரவரின் அரசியல் அறிவுப்புக்குப் பின் வந்திருக்கும் படங்கள். இரண்டும் எதிர்பார்த்த விளைவை தந்திருக்கிறதா? கேள்விக்குறிதான்...

விஸ்வரூபம் 2 - விறுவிறுப்பு சற்று குறைவு.     

 

 

சார்ந்த செய்திகள்