தமிழ் சினிமாவில் இது பெண்கள் காலம். ஒரு பக்கம் நயன்தாரா, ஜோதிகா, திரிஷா, அமலாபால் என நாயகிகள் தொடர்ந்து தங்களுக்கு முக்கியத்துவமுள்ள பாத்திரங்களில் நடித்து படங்களும் வெற்றி பெற்று வர, இன்னொரு பக்கம் திரைக்குள்ளும் 'கனா', 'நேர்கொண்ட பார்வை' என பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகம் வரத்தொடங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் இணையும் 'கென்னடி கிளப்' அந்தப் படங்கள் பெற்ற வெற்றியை பெறுமா?
'கில்லி'யில் அதிரடி கபடியைப் பார்த்துப் பழகியிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'வெண்ணிலா கபடிக் குழு'வில் இயல்பான உண்மையான கபடியையும் கிராமத்துக் கபடி வீரர்களின் பின்னணி, காதல் உள்ளிட்ட வாழ்வியல் விசயங்களையும் மிக நேர்த்தியாகவும் இயல்பாகவும் கூறி முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார் சுசீந்திரன். தொடர்ந்து பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் தந்த அவர் மீண்டும் தனது மண்ணுக்குத் திரும்பிச் சென்று கபடி விளையாடியுள்ளார், இந்த முறை பெண்கள் டீமை வைத்து.
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான சவரிமுத்து (பாரதிராஜா), அந்தப் பகுதியின் எளிய மாணவிகளுக்காக நடத்தும் கபடி பயிற்சி நிலையம் மற்றும் குழுதான் 'கென்னடி கிளப்'. அவர்களது வறுமையை விளையாட்டில் பெறும் வெற்றி, அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் மூலம் துடைக்கலாம் என்னும் லட்சியத்தோடு செயல்படுகிறார். அந்தப் பயணத்தில் எதிர்கொள்ளும் இடர்கள், அரசியல், அதை எப்படி கடக்கிறார்கள், அதற்கு முருகானந்தம் (சசிக்குமார்) எப்படி உதவுகிறார் என்பதே 'கென்னடி கிளப்'.
வறுமையைத் தாண்டி முன்னேற விளையாட்டு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நடத்தும் கிளப், கிண்டலடிக்கும் ஆண்களை கபடியில் மிரட்டும் பெண்கள் என நேர்மறையான பல விஷயங்களைக் கொண்டு தொடங்கும் படம், பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் தடைகள், அரசியல் என மிக வழக்கமான பாதையில் பயணிக்கிறது. கபடி டீமில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் உண்மையான கபடி வீராங்கனைகள் போல... நிஜமான கபடி போல மிரட்டுகிறார்கள். க்ரூப்புல டூப்பு போல ஓரிருவரும் இருக்கிறார்கள். டீமில் 'முருகா' என சசிகுமாரை அழைக்கும் அந்த 'துரு துரு' பெண்ணும், காதலனை மிரட்டும் அந்தப் பெண்ணும், இரட்டையர்களாக வரும் வீராங்கனைகளும் கவனம் ஈர்க்கிறார்கள். மற்ற யாருக்கும் அழுத்தமான பின்னணியோ, தனிப்பட்ட பாத்திரப்படைப்போ இல்லாதது குறை. வெளியிலும் சரி, களத்திலும் சரி கென்னடி கிளப் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பெரும்பாலும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழக்கப்பட்ட பிரச்சனைகளாக இருக்கின்றன.
கபடி ஆட்டங்கள், ஆண்டனியின் படத்தொகுப்பால் சுவாரசியமாக உருவாக்கப்பட முயற்சி செய்யப்பட்டிருக்கின்றன. இமானின் இசையில் 'கபடி கபடி' பாடல் அதிரடிக்கிறது. பின்னணி இசை கொஞ்சம் ஓவர்டோஸாகப் போகிறது. இமான் கொஞ்சம் கவனிக்கவேண்டும்.
சசிக்குமார், அமைதியாக, பக்குவமாக நடித்துள்ளார். பாரதிராஜா, உணர்ச்சிப் பிழம்பாகப் பொங்கியுள்ளார், ஆங்காங்கே தேவைக்கு அதிகமாகவும். கபடி வீராங்கனைகள் சிலர் மட்டும் கபடி தவிர்த்த பிற காட்சிகளில் சற்று செயற்கையாகத் தெரிகிறார்கள். படத்தில் நகைச்சுவைக்கான முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்திருக்கின்றன. கபடி வீராங்கனையை திருமணம் செய்யும் அந்த கிராமத்து இளைஞன் சொல்லும் காதல் கவிதைகள் மட்டும் சிரிக்கவைக்கின்றன. சூரியின் 'பரோடா', 'புரோட்டா' காமெடி சற்றும் சிரிக்கவைக்கவில்லை.
இயக்குனர் சுசீந்திரன் உருவாக்கும் படங்களில் நேர்மறையான நல்ல செய்திகள் இருக்கின்றன. ஆனால், முழுமையான சுவாரசியமான திரைப்படங்களாக இருக்கின்றனவா? புதிய விஷயங்களை பேசுகின்றனவா என்றால் அது கேள்விக்குறியாக இருக்கின்றன. மீண்டும் புத்துணர்ச்சியுடன் அவர் வர வேண்டும்.
கென்னடி கிளப் - பழகிய களம், சுமாரான ஆட்டம், ஆனாலும் பார்க்கலாம்.