மாதாமாதம் கவனிக்கத்தக்க வகையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் படங்களையும், வெப் சீரியஸ்களையும் தொடர்ந்து கொடுத்து வரும் ஜி5 ஓடிடி நிறுவனம் அடுத்ததாக தற்போது அயலி என்ற வெப் சீரிஸ்சை ரிலீஸ் செய்துள்ளது. இது ஜீ 5யின் முந்தைய வெப் சீரிஸ்கள் பெற்ற அதே வரவேற்பை பெற்றுள்ளதா? இல்லையா?
1990களில் பெண் அடிமைத்தனம் நிறைந்த ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெண் தன் காதலனோடு ஊரை விட்டு ஓடி விடுகிறார். இதனால் மிகப்பெரிய சாமி குற்றம் ஏற்பட்டு விட்டதாக அஞ்சிய கிராம மக்கள் புலம்பெயர்ந்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விடுகின்றனர். அங்கு பெண்களுக்கு எதிராக கடுமையான சட்ட திட்டங்களை வகுக்கின்றனர். அதன்படி பழமைவாதம், பின்னடிமைத்தனம் போன்றவைகளை கடுமையாக பின்பற்றி வரும் அந்த கிராமத்தில் பிறக்கும் பெண்கள் வயதுக்கு வந்த உடனேயே வெளியே எங்கும் செல்லாதபடிக்கு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கம் நாளடைவில் வழக்கமாகிவிடுகிறது. அக்கிராமத்தில் டாக்டராகும் கனவோடு இருக்கும் தமிழ்ச்செல்வி என்ற பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் வரும் அபி நக்ஷதிரா தான் வயதுக்கு வந்த விஷயத்தை மூடி மறைக்கிறாள். இதனால் அவளுக்கும் அக்ராமத்தில் உள்ள பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அவைகளை அவர் எப்படி சமாளித்தார்? கடைசியில் இவளும், இவளது கிராமத்தின் நிலை என்னவானது? என்பதே நகைச்சுவை கலந்த 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸின் மீதி கதை.
என்னதான் உலகம் முன்னோக்கி நகர்ந்து கொண்டு சென்றாலும், நம் நாடு விஞ்ஞானமயமாகி சென்றாலும் இன்னமும் பல்வேறு கிராமங்களிலும் பல்வேறு குடும்பங்களிலும் இருக்கும் பெண்ணிய அடிமைத்தனத்தை மிக எதார்த்தமாகவும் அதேசமயம் ஜெனரஞ்சகமாகவும் கொடுத்து சிரிக்கவும், ரசிக்கவும் வைத்து உள்ளார் இயக்குனர் முத்துகுமார். கொஞ்சம் அசந்தாலும் மெகா சீரியலாக உருவாகக்கூடிய இந்த கதையை ஜனரஞ்சகமாக காமெடி கலந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ரசிகர்களுக்கு கொடுத்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளார். சமூகத்துக்கு தேவையான முக்கியமான கருத்துக்களை தன் அழுத்தமான வசனங்கள் மூலமும், ஜனரஞ்சகமான நகைச்சுவை காட்சி அமைப்புகள் மூலமும் ரசிக்கும்படியாக திரைக்கதை அமைத்து கவனம் பெற்றுள்ளார். அதேபோல் குறிப்பாக திருமணம் என்ற பெயரில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், அதற்கு துணை போகும் இன்னொரு பெண்களான அம்மாக்கள் என அவரவர் செய்யும் தகவல்களை எந்த சமரசமும் இன்றி ஏற்றுக்கொள்ளும்படி சுட்டிக்காட்டி மெசேஜ் உடன் கூடிய ஜனரஞ்சகமான வெப்சீரிசை கொடுத்து இப்படத்தை கரை சேர்த்துள்ளார் இயக்குனர் முத்துக்குமார்.
படத்தின் நாயகி பள்ளி மாணவி தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிக எதார்த்தமான நடிப்பால் கைத்தட்டல் பெற்றுள்ளார். சின்ன சின்ன முக பாவனைகள், வசன உச்சரிப்பு, அப்பா அம்மாவிடம் காரியம் சாதித்துக் கொள்ளும் இடங்களில் என தனக்கு கொடுத்த ஸ்பேசில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். குறிப்பிட்ட சில காட்சிகளில் தனது அதிரடியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். அபி நக்ஷத்ராவின் அம்மாவாக வரும் அனுமோல் ஆரம்பத்தில் ஸ்ட்ரிக்ட் தாயாக இருந்து பின்னர் சமரசமாகும் தாயாக மாறி நெகிழ்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். அபியின் அப்பாவாக வரும் அருவி மதன் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் சிங்கம் புலி, லவ்லின், காயத்ரி, தாரா, டி எஸ் ஆர், தர்மராஜ், ஜென்சன், பகவதி பெருமாள் மற்றும் சிறப்பு தோற்றத்தில் வரும் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து காட்சிகளுக்கும், திரைக்கதைக்கும் வலு சேர்த்து விட்டு சென்றிருக்கின்றனர்.
ராம்ஜியின் ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் பள்ளி மாணவி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிகளுக்கும், கதை நகர்விற்கும் மிகுந்த வலு சேர்த்து உள்ளது ரேவாவின் பின்னணி இசை. பல எமோஷனலான காட்சிகளை இவரது பின்னணி இசை எலிவேட் செய்திருக்கிறது.
சில முக்கியமான எமோஷனலான காட்சி அமைப்புகள் நிறைந்த இடங்களில் மட்டும் சற்றே காமெடி காட்சிகளை குறைத்து இருக்கலாம். மற்றபடி நம் ஊரில் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கும் முக்கியமான சமூக பிரச்சனையை பேசி உள்ள இந்த வெப் சீரிஸ் அதை மிகவும் சீரியஸ் ஆக இல்லாமல் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன் அதே சமயம் அழுத்தமாகவும் கலந்து கொடுத்து பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
அயலி - முக்கியமானவள்!