செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார். யாஷிகா ஆனந்த் சென்ற கார், நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில், அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், நடிகை யாஷிகாவின் தற்போதைய உடல்நிலை குறித்து அவரது தாயார் கூறியுள்ளார். அதில்...
"யாஷிகா தற்போது நலமுடன் இருக்கிறார். கால், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. விபத்தில் அவரது தோழி இறந்த செய்தி அவருக்கு இன்னும் தெரியாது. யாஷிகா கண் விழித்தவுடன் அவரது தோழி பவானி குறித்து கேட்டபோது, அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளோம். மேலும், மருத்துவர்கள் இதுகுறித்து யாஷிகாவிடம் பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டார்கள். சிகிச்சைக்குப் பின் யாஷிகா மூன்று மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். மேலும், இரண்டு மாதங்கள் கழித்துதான் யாஷிகாவால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.
இதற்கிடையே தற்போது யாஷிகாவின் தங்கை ஓஷேன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா உடல்நலம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்... "கடவுளின் கிருபையால் யாஷிகாவுக்கு நினைவு திரும்பியுள்ளது. அவரது எலும்பு முறிவுகளுக்கான அறுவை சிகிச்சைகள் நல்லபடியாக முடிந்தன. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். சில நாட்கள் அவளுக்கு முக்கியமான கட்டமாக இருக்கக்கூடும் என்பதால், அவளுக்காகவும், அவள் குணமடையவும் நீங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். உங்களுடைய தார்மீக ஆதரவு மிகவும் முக்கியமானது. அது இந்த நேரத்தில் யாஷிகாவின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் உதவும். எனவே தயவுசெய்து அவளுக்கான பிரார்த்தனைகளைக் குறைக்க வேண்டாம். நமக்கு நம் போராளி யாஷிகா மீண்டு வர வேண்டும். அது மருத்துவர்கள் மற்றும் உங்கள் ஆதரவு இல்லாமல் நிச்சயமாக நடக்காது" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் மீது அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச் சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவரது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.